பின்னிரவு நேரம், சுற்றிலும் கும்மிருட்டு, அருகில் கடைகள் எதுவுமில்லை, எனக்கோ கார் ஓட்டுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது, என் நண்பருக்கோ அது கூட தெரியாது.
கஸ்டமர் கேர் நண்பர் என்னிடம் ஆங்கிலத்தில் பேசமுடியுமா என்று கேட்டார். முடியும் என்று சொல்லிவிட்டு கார் நின்றுபோனதை சொன்னவுடன், இடத்தைக் கேட்டார். முட்டுக்காடு முதலைப் பண்ணை அருகே என்றவுடன் வேறு ஏதாவது அடையாளம் சொல்ல முடியுமா என்றார், மகாபலிபுரம் அருகே என்றேன், வேறு ஏதாவது என்று அந்தாள் மீண்டும் கேட்கவே சென்னைக்கு அருகே என்றேன்.
இப்படியெல்லாம் பொத்தாம்பொதுவாக சொல்லக் கூடாது, சரியாக சொன்னால்தான் கஸ்டமர் கேர் சர்வீஸ் ஆள் வருவார் என்று எரிச்சலூடியபோது, நீ எங்கிருந்து பேசுகிறாய் என்று நான் கேட்டேன். டெல்லியிலிருந்து என்றான் அந்த பன்னாடை. எனக்கு பற்றிக்கொண்டு வந்தது. கால் சென்டர் கலாசாரத்தின் உச்சக்கட்ட அபத்தம் இதுதான். சென்னை அருகே ஒரு அத்துவானக் காட்டில் என் கார் நிற்கிறது, கஸ்டமர் கேர் அதற்கு டெல்லியில் உள்ள கால் சென்டரில் சென்னையைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவன் என் கழுத்தை அறுக்கிறான்.
அவனிடம் சென்னை எண் ஏதாவது இருந்தால் குடு என்று வாங்கிக் கொண்டு சென்னை எண்ணைக் கூப்பிட்டால் பதில் இல்லை. பிறகு ஜஸ்ட் டயல் எண்ணைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் நான்கைந்து எண்களைக் கொடுத்தார்கள். ஒவ்வொன்றாக சுற்றியபோது யாருமே எடுக்கவில்லை. கடைசியாக அடையாரில் உள்ள கார்ஸ் இந்தியா என்ற மாருதி டீலர் கடையில் ஒரு ஆள் எடுத்தார். அவரிடம் புகார் கொடுத்தவுடன், "சார், சென்னை நகர் எல்லைக்கு அப்பால் நீங்கள் இருப்பதால் நான் எதுவும் செய்ய முடியாது," என்றார். அடப்பாவி, நிற்கிற காருக்கு அது சென்னை எல்லைக்கு உள்ளேயா, வெளியேயா என்று எப்படிதெரியும்?
அந்த ஆளிடம் ரொம்பவும் கேட்டுக் கொண்டபின், "சரி, வருகிறேன், ஆனால் மினிமம் ஒரு மணிநேரத்துக்கு மேல் ஆகும், கட்டணம் ரூ.850, அதற்கு மேல் ரிப்பேர் செலவு என்றார். அப்பா, நீ வந்து சேர்ந்தால் அதுவே போதும் என்றேன். மறுபடியும் இருட்டில் காத்திருந்தோம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கடந்த பின்னும் அந்தாளைக் காணவில்லை, சரி என்று அந்தாளின் அலை பேசியில் தொடர்பு கொண்டால், "வண்டி ஓட்டும்போது நான் யார்கிட்டயும் பேச மாட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்பேன், சும்மா சும்மா கூப்பிடாதீங்க," என்றார் அந்த ஆள். அடப்பாவி, கார் ஓட்டும் போது காதில் ஹெட் போன் போடக் கூடாதா என்று கேட்க முடியவில்லை. படக்கென்று கோபித்துக் கொண்டு திரும்பவும் சென்றுவிட்டால், எனவே வாயை மூடிக் கொண்டு காத்திருந்தேன்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து வந்து சேர்ந்த அந்த மெக்கானிக் காரின் டைமிங் பெல்ட் போய்விட்டது என்றார், இந்த மாதிரி டைம் பார்த்து புட்டுக் கொள்வதால்தான் அதன் பெயர் டைமிங் பெல்டா? சபாஷ்.
பிறகு, புது பெல்ட் போடவேண்டும் அதன் விலை ரூ.695/- அதற்கு தனியாக லேபர் சார்ஜ் ரூ.550 என்றார். பகல் கொள்ளை போல இது பின்னிரவுக் கொள்ளை. சரி, சரி வேலையை முடியுங்கள் என்றேன். புது பெல்டை எடுத்து மாட்ட முயன்ற போது, அவருடைய அலைபேசியில் அழைப்பு வந்தது. தசாவதாரம் நாயுடு போல எஸ் சார், எஸ் சார் என்று சொல்லி பேச ஆரம்பித்த போது அது அவருடைய உயரதிகாரி என்று புரிந்துகொண்டேன். கிட்டத்தட்ட 15 நிமிடம் பேசிவிட்டு, "ஒரே நாய் பொழப்பு சார் இது, எவனோ புதுசா கார் டெலிவரி எடுத்த ஒடனே கார்ல ரிப்பேராம், இப்பவே ஆதம்பாக்கம் போன்னு எங்க டீஜிஎம் சொல்றாரு," என்று சொல்லிவிட்டு அவர் வேலையைத் தொடர முயற்சிக்கும்போது மறுபடியும் அலைபேசி அழைப்பு, மறுபடியும் ஒரு 20 நிமிடத்துக்கு எஸ் சார், எஸ் சார் பேச்சு. அந்த மெக்கானிக்கை போட்டு சவட்ட வேண்டும் என்று வந்த வெறியை கிடப்பில் போட்டுவிட்டு பொறுமையாக நின்றேன்.
கடைசியில் ஒரு மாதிரியாக மூன்று மணி நேரத்தில் கார் மறுபடியும் உயிர் பெற்றது. கஸ்டமர் கேர் என்றால் என்னவென்றே தெரியாமல் டெல்லையில் கால் சென்டர் வைத்துக் கொண்டு சென்னையில் உள்ளவர்களின் தாலியை அறுக்கும் இந்தப் பணிக்கு பெயர் கஸ்டமர் கேர் சர்வீஸ் என்றால் அந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது.
நண்பனின் வீட்டை அடைந்து ஒரு மூன்று லார்ஜ் ப்ளாக் டாக் (கருப்பு நாய்) ஸ்காட்ச் விஸ்கி அடித்த செலவு எக்ஸ்ட்ரா. வாழ்க இந்தியா!
Comments