சில நாட்களுக்கு முன் HBO சானலில் இந்தப் படம் காட்டப்பட்டபோது அவ்வளவாக எதிர்பார்ப்பு ஏதும் இன்று அதை காண முற்பட்டேன். அவ்வளவாக தெரியாத நடிகர்கள், படத்தின் பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை. ஆனால், இயக்குனர்(கள்) யார் என்று தெரிந்தவுடன் நான் உற்சாகமாகிவிட்டேன். Matrix என்ற பெயரில் மூன்று பாகங்கள் எடுத்து பெரும் பரபரப்பையும், நல்ல பெயரையும், ஏராளமான பணத்தையும் சம்பாதித்த 'Wachowski சகோதரர்கள்" இயக்கிய முதல் படம் இது. 1996 இல் வெளிவந்த இந்தப் படம் ஒரு neo-noir crime thriller என்று புகழப்படுகிறது.
பிற்பாடு பல புதுமைகளை அரங்கேற்றிய Matrix series படங்களை இயக்கிய இந்தத் திறமையான சகோதரர்கள் முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார்கள் என்றால் அது ஒன்றும் அதிசயமில்லை.
1996 ம் ஆண்டிலேயே lesbian உறவை மிகத் துணிச்சலாக காட்டியுள்ள இந்தப் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது.
ஐந்தாண்டு சிறையில் இருந்துவிட்டு வெளிவரும் கார்கி (Gina Gershon) அடுத்தது எங்கே கை வைக்கலாம் என்று நோட்டம் பார்க்க தன்னுடைய ப்ளம்பர் மற்றும் பெயிண்டர் திறமைகளை வைத்துக்கொண்டு ஒரு பணக்கார அபார்ட்மென்ஸ் ஒன்றில் குடிவருகிறாள். ஜினா கெர்ஷனின் தெத்துப்பல்லும், அலட்சியமான பார்வையும், மிகவும் ஸ்லிம்மான உடற்கட்டும் படு செக்ஸியான தோற்றத்தைக் கொடுக்கின்றன.
அருகே இருக்கும் flat ஒன்றில் குடியிருக்கும் வயலெட் (Jennifer Tilly) -என்ன ஒரு செக்ஸியான, கிசுகிசுக்கும் குரல், வாவ்!-கார்கி மீது ஆசை கொள்கிறாள். இருவரும் அவர்களுடைய லெஸ்பியன் உறவை ஆரம்பிக்கிறார்கள். பழக ஆரம்பித்த இரண்டாம் நாளே வயலெட் தன்னுடன் இருக்கும் சீசரைப் பற்றி கார்கியிடம் சொல்கிறாள்.
சீசர் ஒரு mafia கூட்டத்தைச் சேர்ந்தவன் என்றும், சமீபத்தில் அவனுடைய கூட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆள்காட்டியைக் கொன்று அவனிடம் இருக்கும் இரண்டு மில்லியன் டாலர்களை சீசர் சுட்டுவிட்டான் என்றும் சொல்கிறாள். வயலெட்டுக்கு சீசர் மீது அப்படி ஒன்றும் காதல் இல்லை என்று தெரிந்துகொள்ளும் கார்கி, வயலெட் உதவியுடன் சீசரிடம் இருக்கும் அந்தப் பணத்தை திருட ஒரு திட்டம் போடுகிறாள்.
வயலெட் மூலம் சீசரின் முதலாளி ஜீனோ மார்ஸோனியின் மகன் ஜானிக்கும் சீசருக்கும் எப்போதுமே ஆகாது என்பதைத் தெரிந்துகொள்ளும் கார்கி, அதைத் தன்னுடைய திட்டத்துக்குப் பயன்படுத்த நினைக்கிறாள். ஜீனோ மார்ஸோனி ஒரு இத்தாலிய mafia கும்பலின் தலைவன், ஈவு இரக்கம் இல்லாமல் தனக்கு பிடிக்காதவர்களை போட்டுத்தள்ளி விடுவான் என்ற ஒரு தகவல் கார்கிக்குப் போதுமானதாக இருக்கிறது.
கார்கியின் திட்டப்படி, சீசர் தன்னுடைய வீட்டுக்கு வரும் ஜீனோ மார்ஸோனியை வரவேற்க தயாராகி குளித்துக்கொண்டிருக்கும் வேளையில், முதலாளிக்கென வைத்திருக்கும் ஸ்காட்ச் பாட்டிலை கீழே போட்டு உடைக்கிறாள் வயலெட். பாத்ரூமில் இருக்கும் சீசரிடம் இதைச் சொல்லி ஜீனோ மார்ஸோனி வருவதற்குமுன் தான் கடைக்குச் சென்று அதே பிராண்ட் ஸ்காட்ச் பாட்டிலை வாங்கி வருவதாகச் சொல்லி வெளியே போகிறாள் வயலெட். இந்த சந்தர்பத்தில் உள்ளே வரும் கார்கி சீசரின் அந்த இரண்டு மில்லியன் பணத்தை திருடிவிடுகிறாள்.
அடுத்த சில நிமிடங்களில் ஸ்காட்ச் பாட்டிலுடன் உள்ளே வரும் வயலெட், தான் கீழே வரும்போது அவர்களுடைய அபார்ட்மெண்டில் இருந்து ஜானி வெளியே செல்வதைப் பார்த்ததாகக் கூற, அவளுடைய காதலன் சீசர் குழப்பம் அடைகிறான். எப்படி ஜீனோ மார்ஸோனி இல்லாமல் அவனுடைய மகன் ஜானி மட்டும் வந்திருக்க முடியும் என குழம்பிவிட்டு, தான் கொண்டுவந்த இரண்டு மில்லியன் டாலர்கள் பத்திரமாக இருக்கிறதா என்று பார்க்க அது தொலைந்து விட்டதை அறிந்தவுடன் சர்வ நிச்சயமாக அதை ஜானிதான் எடுத்திருக்க வேண்டுமென தீர்மானிக்கிறான்.
வயலெட்டிடம் தான் ஜானியைப் போட்டுத்தள்ளப் போவதாகச் சொல்கிறான். உள்ளூர எல்லாமே கார்கி திட்டமிட்டபடியே நடப்பதை அறிந்து மகிழ்ந்தாலும் வெளியே பயப்படுவது போல நடிக்கும் வயலெட் சீசரை விட்டுவிட்டு எங்கேயாவது சென்றுவிடுவதாக மிரட்டுகிறாள். எதையுமே சந்தேகக் கண்ணோடுடன் பார்க்கும் சீசர் இந்தத் திருட்டையும் ஜானி வயலெட் உதவியுடன் செய்திருக்கலாம் என நினைத்து, வயலெட்டை எங்கேயும் போககூடாது என மிரட்டுகிறான்.
இதை எல்லாவற்றையும் அடுத்து இருக்கும் அபார்ட்மென்டில் இருந்து ஒட்டு கேட்கும் கார்கி மகிழ்ச்சி அடைகிறாள். அதே சமயம், சீசர் வீட்டுக் கதவுமணி அழைக்க, கதவைத் திறந்தால் அங்கே ஜானி, ஜீனோ மார்ஸோனி மற்றுமொரு அடியாளுடன் நிற்பதைக் கண்ட சீசர் பதறாமல் மூவரையும் வீட்டுக்குள் அழைக்கிறான். ஸ்காட்ச் சாப்பிட்டுக் கொண்டே ஜீனோ மார்ஸோனி தன்னுடைய மகன் ஜானியுடன் சீசர் நட்பாக இருக்க வேண்டுமென சொல்கிறான். பேச்சு இரண்டு மில்லியன் டாலர்கள் பக்கம் திரும்புகிறது. சீசர் நிதானமாக அந்தப் பணம் திருட்டு போய்விட்டதென்றும் அதை கொஞ்சம் நேரம் முன்பு ஜானி திருடிவிட்டதாகவும் கூற, ஜானி ஆத்திரமடைகிறான். ஜீனோ மார்ஸோனி தன்னுடைய மகன் அதை திருட சாத்தியமே இல்லை என்கிறான். பேச்சு வார்த்தை முற்ற, ஆத்திரம் தலைக்கேறும் சீசர் தன்னுடைய துப்பாகியால் ஜானி, அவனுடைய அடியாள் மற்றும் ஜீனோ மார்ஸோனி ஆகிய மூவரையும் கொன்றுவிடுகிறான்.
கொன்றுவிட்டு அந்த மூன்று பிணங்களையும் தன்னுடைய பாத்ரூமில் ஒளித்துவைக்கிறான். துப்பாக்கி சத்தம் கேட்டு யாரோ ஒருவர் போலீசுக்கு தகவல் தர, அங்கு வரும் போலீசை வயலெட் சமாளித்து அனுப்பிவிடுகிறாள். சீசர் இதற்கிடையே ஜீனோ மார்ஸோனியின் நண்பனான மிக்கியிடம் இன்னும் ஜீனோ, ஜானி ஆகியோர் தன்னுடைய வீட்டுக்கு வரவில்லை என்று சொல்கிறான். இடைப்பட்ட நேரத்தில் வயலெட்டுடன் ஜானியின் வீட்டுக்குச் சென்று அங்கு பணம் இருக்கிறதா என தேடுகிறான்.
பணம் கிடைக்காமல் வெறும் கையுடன் வீடு திரும்பும் சீசர், குடிப்பதற்காக விஸ்கி எடுக்கச் செல்லும் நேரத்தில் வயலெட் அவளுடைய வீட்டு போனில் இருந்து கார்கியிடம் தகவல் சொல்லும்போது அதைக் கேட்கும் சீசர் வயலெட் பேசுவது யாருடன் என தெரிந்துகொள்ள அவளை மிரட்டுகிறான். நிலைமை கைமீறி விட்டதை அறிந்து வயலெட்டுக்கு உதவ அவர்கள் வீட்டுக்குள் வரும் கார்கியைப் பார்த்தவுடன் அதே கிரிமினல் அலைவரிசையில் சிந்திக்கும் திறன் பெற்ற சீசர் சட்டென நிலைமையைப் புரிந்து கொள்கிறான்.
நடந்த எல்லாவற்றுக்குமே வயலெட் மற்றும் கார்கியே காரணம் எனப் புரிந்து கொண்டு கார்கியை அடித்து நொறுக்குகிறான். அதற்கெல்லாம் அசராத கார்கி, சீசர் என்ன செய்தாலும் அந்தப் பணமோ, வயலெட்டோ அவனுக்குக் கிடைக்கப் போவதில்லை என மிரட்டுகிறாள்.
ஆத்திரம் தலைக்கேற, சீசர் வெறிபிடித்தவன் போல வீடெங்கும் பணத்தைத் தேடுகிறான். பணம் பத்திரமாக ஒரு பாலிதீன் உறைக்குள் போடப்பட்டு அது ஒரு பெயிண்ட் டப்பாவுக்குள் இருப்பதையும் கண்டுபிடித்து விடுகிறான். இதே நேரத்தில், வயலெட் மிக்கியிடம் போன் செய்து சீசர் பணத்தைத் திருடிக்கொண்டு, ஜானி மற்றும் ஜீனோ மார்ஸோனியையும் கொன்றுவிட்டு, தன்னையும் தாக்கிவிட்டு ஓடிப் போய்விட்டான் என்று சொல்கிறாள். மிக்கி உடனே தன்னுடைய குண்டர்கள் புடை சூழ அங்கு வருவதாகச் சொல்கிறான்.
இதைக் கேட்கும் சீசர் வயலெட்டிடம் அலட்சியமாக தான் அங்கிருக்கும்போது அவள் கார்கியுடன் போடும் திட்டம் எதுவுமே நடக்கப் போவதில்லை என ஏளனமாக சொல்கிறான். அதே அலட்சியத்துடன் தன் கையில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து சீசரை சுடப் போகிறாள். சீசர் வயலெட்டிடம் "you can't kill me, Violet, I know you," என்கிறான். வயலெட், "you know shit about me Caesar," என்று சொல்லிவிட்டு அவனை சுட்டுவிடுகிறாள்.
மிக்கி அங்கு வருவதற்குள் சீசரின் பிணத்தை காரில் மறைத்து விட்டு, அதில் கார்கியையும் ஒளிந்து கொள்ளச் சொல்கிறாள் வயலெட். மிக்கி வந்தவுடன் அங்கு நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி, பாத்ரூமுக்குள் இருக்கும் ஜானி மற்றும் ஜீனோ மார்ஸோனி ஆகியோரின் பிணங்களையும் காண்பிக்கிறாள் வயலெட். அவள் சொல்லும் எல்லாவற்றியும் நம்பும் மிக்கி, அந்தப் பிணங்களை எல்லாம் அகற்றிவிடுகிறான். சீசர் தன்னிடம் இருந்து தப்ப முடியாது என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான்.
கார்கி போட்ட திட்டம் நிறைவேறிவிட்ட நிலையில் அவளுடன் வாழ்க்கையைத் தொடர மகிழ்ச்சியுடன் செல்கிறாள் வயலெட்.
38 நாட்களில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுத்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதை இயக்கிய Wachowski சகோதரர்கள் இன்று ஹாலிவுட்டின் மிகுந்த புகழ் பெற்ற இயக்குனர்கள் வரிசையில் சேர்ந்து விட்டார்கள்.
108 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்தப் படம் ஒரு மிகத் தெளிவான திரைக்கதையுடன், பரபரப்பாக நகரும் ஒரு அருமையான த்ரில்லர். மிஸ் செய்யாமல் பாருங்கள்.
இரண்டே வரிக்கதை, புதுமுக நடிகர்கள், ஒரே ஒரு அபார்ட்மென்ட், சுமாரான இசை இதை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வளவு அட்டகாசமாக ஒரு படம் தந்திருக்கும் இயக்குனர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நம்முடைய இயக்குனர்கள் இதை எப்படி இன்னும் சுடாமல் இருக்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியம். லெஸ்பியன் என்ற நூலை விட்டுவிட்டு ஒரு அருமையான த்ரில்லரை சுவை குறையாமல் தமிழிலும் தர ஏ. ஆர். முருகதாஸ், அறிவழகன் போன்ற இயக்குனர்கள் முயற்சிக்கலாம்.
Comments