Social என்பதை சோஷியல் என்று உச்சரிப்பது தவறு, அதன் சரியான உச்சரிப்பு "சோஷல்" என்பதாகும். சரி, சரி, நான் இந்தப் பதிவை முன் வைக்க வந்தது உங்களுக்கு ஆங்கில இலக்கணம் சொல்லித்தர அல்ல.
சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ள இந்தப் படத்தை விமரிசனம் செய்யும்முன் ஒரு சிறிய அறிமுகம்; நம்மில் பல பேர் 'Facebook" பயன்படுத்துகிறோம், ஆனால், மார்க் ஜூக்கர்பெர்க் என்றால் யார் என்று தெரியுமா? அவர்தான் இந்த 'Facebook" கை உலகிற்கு அறிமுகம் செய்வித்தவர்.
இன்று உலகத்தில் மிக இளைய பில்லினர் (billionaire). Facebook 2004 ம் ஆண்டில் இவரால் தோற்றுவிக்கப்பட்டபோது இவர் வயது 20. ஆம் ஜஸ்ட் 20 வயதாகும்போது அமெரிக்காவின் ஹார்வர்ட் யுனிவர்சிடியில் படிக்கும் அவரருடைய தோழி எரிக்காவை வெறுப்பேற்ற செய்த ஒரு விஷயம்தான் ஆறே வருடங்களில் விஸ்வரூபம் எடுத்து இன்றைய தேதியில் Facebook-இன் மதிப்பு சுமார் 25 பில்லியன் டாலர்கள் என மதிப்படப்படுகிறது. அதாவது, ஒரு பில்லியன் டாலர் என்பது நம் இந்திய மதிப்பில் சுமார் 4700 கோடி என்று எடுத்துக்கொண்டால் அதை 25 ஆல் பெருக்கிப் பாருங்கள், அதுதான் Facebook இன் இன்றைய மதிப்பு.
நகலும் அசலும் |
Ben Mezrich எழுதிய Accidental Billionaires என்ற புத்தகத்தை தழுவி எடுத்த படம்தான் இது. ஒரு மாணவனின் உப்புசப்பு இல்லாத கல்லூரி வாழ்க்கையில் அவனுக்கு ஏற்படும் ஒரு சிந்தனையில் உருவாகும் Facebook என்ற ஒரு நெட்வொர்கிங் வெப்ஸைட் உலகப்புகழ் பெற்று பணம் காய்க்கும் மரமாக மாறிய ஒரு சாதாரண (!) கதையை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் மாதிரி சரசரவென்று நகரும் விதத்தில் திரைக்கதை அமைத்த Aaron Sorkin மிகவும் பாராட்டுக்குரியவர்.
மார்க் ஜூக்கர்பெர்க்காக நடிக்கும் ஜெஸ்சி ஐஸன்பெர்க் (என்ன ஒரு பெயர் ஒற்றுமை!) மிக நிதானமாக அலட்டாமல் நடிக்கிறார். எந்த இடத்திலுமே அதிகமான அதிர்ச்சியோ, மகிழ்ச்சியோ காட்டாமல் வந்து நம் மனதில் இடம் பிடிக்கிறார்.
தோழி எரிக்காவை வெறுப்பேற்ற 'Facemash' என்ற ஒரு இணையதளத்தை போதையில் இருக்கும்போதே வெளியிட்டு, சில மணிநேரங்களிலேயே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை அல்லோலகல்லோலம் செய்கிறார். ஒரு சின்ன ஐடியாவைப் பிடித்துக் கொண்டு, Facebook நிறுவிய கையோடு பிசினஸ் பார்ட்னர்களை கவிழ்க்கிறார், உயிர் நண்பனுக்கு சர்வசாதரணமாக கல்தா கொடுக்கிறார்.
தனக்கு எதிராக நண்பனும், பார்ட்னர்களும் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெறும்போது அலட்டிக்கொள்ளாமல், எதிர்க்கட்சி வழக்கறிஞரின் உதவியாளரிடம் "போஸ்னியாவில் நல்ல சாலைகளே இல்லை, ஆனால் Facebook இருக்கிறது தெரியுமா?" என்று கலாய்க்கிறார். கடைசியில், தான் உருவாக்கிய Facebook இல் தன்னுடைய தோழி எரிக்காவுக்கு "friend request" அனுப்பிவிட்டு அதை அவள் ஏற்றுக் கொண்டாளா இல்லையா என்று அடிக்கடி தன்னுடைய Facebook பக்கத்தை பொறுமையில்லாமல் refresh செய்வது வரை அலட்டிக் கொள்ளாமல் வரும் கதாநாயகன் நல்ல தேர்வு.
இந்தப் படத்தைப் பற்றி ஒரிஜினல் மார்க் ஜூக்கர்பெர்க் கூறுகையில், " இது என்னுடைய வாழ்க்கைதான், ஆனால், என் வாழ்வு இவ்வளவு டிராமாடிக்காக இருக்காது," என்கிறார். கிட்டத்தட்ட 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழித்து எடுத்த இந்தத் திரைப்படம், வெளியான முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட 181 மில்லியன் டாலர்களை வசூலில் அள்ளிவிட்டது.
மிகவும் விறுவிறுப்பான, வித்தியாசமான திரைப்படம்.
Comments