2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் சந்தி சிரித்துக்கொண்டிருக்கும் வேளையில், அவலை நினைத்து உரலை இடித்த கதையாக இந்த விவகாரம் பற்றி துக்ளக் பத்திரிகையில் எழுதிய சோ மீது பாய்ந்திருக்கிறார் நம் முதல்வர். தயாநிதி மாறன் தயாளு அம்மையாருக்கு ரூ600 கோடி கொடுத்ததாக நீரா ராடியா பேசியிருக்கும் டேப் இப்போது உலகம் பூராவும் வலம் வருகிறது. இதைப் பற்றி வழக்குத் தொடரவோ, கேள்வி கேட்கவோ கருணாநிதியில் முயன்றால் அது நீரா ராடியாவின் மேல்தானே தவிர, இதைப் போன்ற விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் மீது தேவையில்லாமல் பாயக்கூடாது.
இதைப் பற்றி தயாநிதி மாறன் இன்னும் மறுப்பேதும் சொல்லவில்லையே அதை ஏன் கருணாநிதி கேட்கவில்லை? இதைப் பற்றி தயாளு அம்மையாரிடம் ஏதாவது பேசியிருப்பாரா? காரணகர்த்தாக்களான தயாநிதி மாறன், நீரா ராடியா ஆகியோரைப் பற்றி எந்த ஒரு வார்த்தையும் பேசாத முதல்வர் தேவையில்லாமல் சோ மீது பாய்கிறார்.
இதைப் போல நடந்ததா என்று சோ ஏன் நிரூபிக்க வேண்டும்? இது போல நடக்கவில்லை என்று தயாளு அம்மாள் சார்பில் கருணாநிதி அல்லவா நிரூபிக்க வேண்டும். நல்ல காமெடி பெரியவரே!
(கீழே உள்ள செய்தித் தொகுப்பு நன்றி: நறுமுகை இணையத்தளம்)
சோ தயாரா?? முக கேள்வி
அமைச்சர் பதவிக்காக தயாளு அம்மாளுக்கு, தயாநிதி மாறன் ரூ.600 கோடி கொடுத்ததாகச் சொல்வதை நிரூபிக்கத் தயாரா” என்று பத்திரிகையாளர் சோவுக்கு முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:கேள்வி: “மத்திய அமைச்சர் பதவியைப் பெறுவதற்காக தயாளு அம்மாளுக்கு தயாநிதி மாறன் 600 கோடி ரூபாய் கொடுத்ததாக – நீரா ராடியா டேப் உரையாடல் செய்தி கூறுகிறதே?” என்ற ஒரு கேள்விக்கு “துக்ளக்” இதழில் பதில் எழுதும் போது “இது பற்றி, இன்னமும் எந்தவிதமான உறுதியான மறுப்பும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. மத்திய அரசில், மந்திரிகள் நியமனம் ஆகிற முறை பற்றியும், அதில் தி.மு.க. பெற்றுள்ள “பங்கு” பற்றியும் தெளிவாக விளக்குகிற விஷயம் இது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே?.
பதில்: பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒரு சில நாளேடுகளில் இது போன்றதொரு செய்தி வந்த போது, அதைப் பார்த்த நான் இப்படிப்பட்ட பைத்தியக்காரர்களும் நாட்டிலே இருக்கிறார்களே என்று தான் எண்ணிக்கொண்டேனே தவிர, அதைக் கூடவா நம்புபவர்கள் இருப்பார்கள், எனவே அந்தச் செய்தியை மறுக்க வேண்டு மென்று தோன்றவில்லை.
நிரூபிக்க தயாரா?
ஆனால் இன்று அந்தச் செய்தி “துக்ளக்” இதழிலும் வெளி வந்து பதில் சொல்லப்பட்டிருப்பதைக் காணும் போது – ஒரே பொய்யைத் திரும்பத் திரும்ப இவ்வாறு எழுதினால் அது நம்புவதற்குரிய ஒன்றாக ஆகி விடுமோ என்ற நப்பாசையில் தொடர்ந்து அதை எழுதி வருவதால் அந்தச் செய்தியை மறுத்திட விரும்புகிறேன்.
அமைச்சர் பதவிக்காக தன் பேரனிடம் அதுவும் 600 கோடி ரூபாய் அவரின் பாட்டியார் வாங்கினார் என்று உண்மையிலேயே ஒரு காலத்தில் எனக்கு நண்பராக இருந்த சோ நம்புகிறாரா? தயாநிதிமாறனுக்கு அல்ல, வேறு யாருக்காகவாவது அமைச்சர் பதவியை வழங்குவதற்காக தி.மு.க பணம் பெற்றதாக சோ நிரூபிக்கத் தயாராக இருக்கிறாரா? ஏனென்றால் துக்ளக் பதிலில் மந்திரிகள் நியமனம் ஆகிற முறை பற்றியும், அதில் தி.மு.க. பெற்றுள்ள பங்கு பற்றியும் தெளிவாக விளக்குகிற விஷயம் இது என்றும் சொல்லியிருப்பதால், இதனை நான் தெளிவாக்க விரும்புகிறேன்.
சதித் திட்டம்
இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளை திட்டமிட்டு சோ போன்ற ஒரு சில பத்திரிகையாளர்கள் திரித்து வெளியிட்டோ அல்லது அதற்காக கூடிப்பேசி சதித்திட்டம் வகுத்தோ திராவிட இயக்கத்தை சேதப்படுத்த எண்ணுகிறார்களா?.
உண்மையிலேயே தயாநிதிமாறன் அமைச்சர் பதவிக்காக 600 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக துக்ளக் சோவோ அல்லது அந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர்களோ நிரூபிக்கத் தயாராக இருக்கிறார்களா?. அப்படியிருந்தால் அந்தச் செய்தியை உறுதிப்படுத்தி அவர்கள் இதழிலே அதனை அவர்கள் பெயரிலேயே வெளியிடட்டும். அவர்களை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். சோ ராமசாமி, இதற்குப் பதில் சொல்வாரா? இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
Comments