"மழைநீர் கால்வாய்கள் திட்டமிட்டபடி அமைக்கப்படவில்லை. கட்டமைப்பு வசதிகளில் காலத்திற்கேற்ப மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்; இதில், அரசு சிறப்பு கவனம் செலுத்தாவிட்டால் சென்னை தண்ணீரில் தத்தளிப்பது தவிர்க்க முடியாதாகி விடும்' என, குடிநீர் வாரிய ஓய்வு பெற்ற இன்ஜினியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. மூன்று நாட்கள் பெய்த மழைக்கே சென்னை தத்தளித்து விட்டது.
ஆண்டுதோறும் மழைநீர் கால்வாய் அமைத்தல், ஏரிகள் தூர்வாருதல், நீர் வழித்தடங்களை சீரமைத்தல் என, கோடிக்கணக்கில் பணத்தை கொட்டியும் பயன் இல்லை. குடிசைப்பகுதிகள் மட்டுமல்ல, அடுக்குமாடி குடியிருப்புகள் கூட தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது.
சென்னையில், 1,447.91 கோடி ரூபாயில் பொதுப்பணித் துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து நீர் வழித்தடங்களை சீரமைக்கும் பணியை துவக்கியுள்ளன. இதற்கு பலன் கிடைக்குமா, சென்னை தத்தளிக்கும் நிலைக்கு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குடிநீர் வாரிய ஓய்வு பெற்ற இன்ஜினியர்கள் கூறியதாவது: சராசரியாக ஆண்டுக்கு 1,300 மி.மீ., மழை பெய்து வருகிறது. கடந்த 2005ம் ஆண்டில் எப்போதுமில்லாத வகையில் 2,530 மி.மீ., மழை பெய்ததால், சென்னை வெள்ளக்காடானது. அப்போது மழைநீர் சேகரிப்பு திட்டங்களை தீவிரப்படுத்தியிருக்க வேண்டும். சென்னையில் ஆரம்ப காலத்தில் இருந்த கட்டமைப்பு வசதிகளே இன்றும் நம்மிடம் உள்ளன. அதிகமாக பெய்த மழையை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியிருக்க வேண்டும். சென்னையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி இன்னும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
ஏற்கனவே அமைக்கப்பட்டதும் சரி, தற்போது அமைக்கப்பட்டு வரும் மழைநீர் கால்வாய்களும், மழைநீர் எளிதாக செல்லும் வகையில், "வாட்டம்' பார்த்து சரியாக அமைக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. இதனால், உரிய இடத்திற்கு மழைநீர் சென்று சேருவதில்லை. மேலும், ஏற்கனவே அமைக்கப்பட்ட கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாததால், சகதிகள் அதிகம் தேங்கிவிடுகின்றன. இதனால், மழைநீர் வழிந்தோடாமல், சாலைகளிலும், குடியிருப்புகளிலும் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்படுகிறது.
மழைநீர் கால்வாய் முறையாக அமைக்கப்படாததால், மழைநீர் அனைத்தும் கழிவுநீர் குழாய்களில் செல்கிறது. இந்நிலையை மாற்ற வேண்டும். மழைநீர் கால்வாய்களை தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்ய வேண்டும். வருவாய் நோக்கில் இல்லாமல், சேவை நோக்கில் பணிகளை செய்ய வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு முன், சென்னை முழுவதும் ஏராளமான மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்த தொட்டிகள் அமைக்கப்பட்டதோடு சரி. அதன்பின் அதிகாரிகள் அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. ஆண்டுக்கு ஒரு முறையாவது தொட்டியில் உள்ள கற்களை சுத்தம் செய்து, மறு சீரமைப்பு செய்ய வேண்டும். மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் வழியாக தண்ணீர் பூமிக்குள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் பெரும்பாலான இடங்களில், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. தற்போது, 1,447 கோடி ரூபாயில் நீர் வழித்தடங்கள் சீரமைப்பு நடக்கிறது. இவை, சரியான திட்டமிடலுடன் அமைக்க வேண்டும். சென்னை முழுவதும் நீர் வழித்தடங்கள் மட்டுமின்றி, மழைநீர் கால்வாய்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டியதும் அவசியம். இதில், சிறப்பு கவனம் செலுத்தாவிட்டால், சென்னை நகர் தண்ணீரில் தத்தளிப்பது தவிர்க்க முடியாததாகி விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் சாமிநாதன் கூறியதாவது: மழைநீர் அனைத்தும் நீர் வழித்தடங்கள் மூலமே, கடலுக்கு செல்ல வேண்டும். நகரின் மட்டம், கடல் மட்டத்துடன் சமமாக இருப்பதால், தண்ணீர் எளிதில் வடிவதில்லை. மழை பெய்யும் போது, தேக்கம் ஏற்பட்டு, மழைவிட்ட பின் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் தண்ணீர் மெதுவாக வடியும் சூழல் உள்ளது. இதற்கு, முழு காரணம் கடல் மட்டம் அளவிற்கு நகரம் இருப்பது தான். மழைநீர் வடிகால் கால்வாய் ஆண்டுதோறும் தூர்வாரப்பட்டாலும், முழுமையாக தூர் எடுக்காமல் விட்டு விடுவதால், பெரும்பாலும் மழைநீர் வடிகால் கால்வாய்களில் தண்ணீர் நன்றாக செல்வதில்லை.
இதனால், மழைநீர் வடிகால் கால்வாய்களில் 10 அடி இடைவெளியில், "மேன் ஹோல்கள்' அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதோடு, மழைநீர் கால்வாய் அமைக்கும் போது தண்ணீர் வெளியேறும் இடத்திற்கு மட்டம் பார்த்து, தண்ணீர் எளிதாக வடியும் வகையில் கால்வாய் அமைப்பதில்லை. பெங்களூரு நகரம் கடல் மட்டத்தை விட பல மீட்டர் உயரம் இருப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை. ஆனால், சென்னையில் மழைநீர் எளிதில் வடியாமல் தேங்குவதால் தான், சாலைகளும் சேதமடைகின்றன. மேலும், ஆண்டுதோறும் மழை காலத்திற்கு முன், பெரிய நீர்வழித் தடங்களில் முகத்துவாரங்களை தூர் எடுத்து தண்ணீர் எளிதில் வடிய வழி செய்ய வேண்டும். அதை தவிர்த்து, நகரில், எவ்வளவு தான் மழைநீர் வடிகால்வாய் கட்டினாலும், எதிர்பார்க்கும் அளவிற்கு பலன் இருக்காது. இவ்வாறு சாமிநாதன் கூறினார்.
மேற்குறிப்பிட்ட செய்தித் தொகுப்பு இன்றைய தினமலர் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது (நன்றி : தினமலர்/ புகைப்படங்கள் நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா)
அதில் சொல்லாத சில விஷயங்கள்:
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னையில் மழை பெய்கிறது என்று திட்டவட்டமாகத் தெரிந்த பின்பும் சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணியையும், அவைகளைத் தூர் வாரும் பணியையும் ஜூன், ஜூலை மாதங்களில் செய்யாமல் மழை கொட்ட ஆரம்பித்த பின்னரே செய்கின்றனர். இது ஏன் என்பது பொதுமக்களுக்கு விளங்காத ஒன்று.
- சாலைகள் மற்றும் மழை நீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் அவற்றை ஏனோதானோ என்று செய்வதை அரசு கண்டுகொள்ளவதில்லை, காரணம், அவர்கள் ஒரு பெரும்தொகையை அந்தந்த இலாகாக்களைச் சேர்ந்த அமைச்சர்கள் அவருடைய அடிபொடிகள் எல்லோரையும் கவரும் வண்ணம் கொடுத்துதான் அந்த உரிமங்களைப் பெறுகிறார்கள் எனவே, இந்த நிறுவங்களை யாரும் தட்டிக் கேட்பதில்லை.
- சமீபத்தில் ஒரு வார இதழில் இதைக் குறிப்பிட்டு பெரும்பாலான புகழ் பெற்ற தனியார் நிறுவனங்கள் இந்தப் பணியை ஏற்க தயக்கம் காட்டுகின்றன. ஏனென்றால், இந்தப் பணிக்கென அரசு ஒதுக்கும் தொகையில் ஒரு பெரிய பகுதி அந்தந்தத் துறை அமைச்சர்கள், அந்தந்த ஏரியா எம்.எல்.ஏ ஆகியோருக்கு போன பின்பு மிஞ்சும் தொகையில் சரிவர எந்தப் பணியையும் உருப்படியாக செய்யமுடியாது என்பதால்தான் என்று சொல்லப்பட்டிருந்தது.
- மழை என்பது ஒரு இயற்கை விதி. இதை நமக்கு பயனுள்ள வகையில் மாற்றிக் கொள்ள வேண்டியது ஒரு முக்கியமான வேலை. தற்போதைய அரசாங்கம் மழை நீர் சேமிப்பு திட்டம் என்பது அதிமுக அறிவித்த/ஏற்பாடு செய்த ஒன்று என்ற ஒரே காரணத்தினால் அந்தத் திட்டத்தைப் புறக்கணிக்கிறது. இந்த கேலிக்கூத்துக்கு பலி ஆவது பொதுமக்கள்தான். எந்த அமைச்சரின் வீடும் நீரில் மிதப்பதில்லை, எந்த எம் எல் ஏ வீட்டிலும் மழை நீர் புகுவதில்லை எனவே இதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையும் இல்லை.
- மழை கொட்டி, தண்ணீர் புகுந்து, வீட்டுச் சுவர்கள் இடிந்து பல உயிர்கள் போனபிறகு, பல கோடி ரூபாய் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமான பிறகு, பொதுமக்களின் ஏராளமான சொத்துக்கள் நாசமான பிறகு முதல்வர் மழை நிவாரண நிதி ரூ.5000 என இன்று அறிவிக்கிறார்.
- வருமுன் காக்க வேண்டுமென்ற கொள்கை இல்லாத இந்த அரசாங்கத்தின் எல்லா வேலைகளுமே சம்பந்தப்பட்ட அமைச்சர் பெருமக்கள் வருவாய் ஈட்டுவதற்கு மட்டுமே வழி செய்கின்றன. பாவம் பொதுமக்கள். ஒரு பழைய படத்தில் பி.எஸ்.வீரப்பா சொல்வது போல "இந்த நாடும், வீடும் நாசமாக போகட்டும்," நம் அமைச்சர்கள் கோடி, கோடியாக சம்பாதித்து நன்றாக இருக்கட்டும்.
Comments