திருப்பதி ஏழுமலையானை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிப்பது என்பது இன்றைக்கு ஒவ்வொருவரின் வாழ்நாள் லட்சியமாகிவிட்டது.
ஆனால், ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஏழுமலையானை அதிகாலையில் முதல் ஆளாகத் தரிசிப்பதும், இரவில் நடை அடைப்பதற்கு முன் இறுதியாக தரிசிப்பதும் இன்றும் நடந்து வருகிறது. யார் அவர்கள்? அவர்களின் பின்னணி என்ன? அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை?
திருமகளுக்கும் பெருமாளுக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்ட போது, திருமகள் கோபித்துக் கொண்டு பூமிக்கு வந்துவிட, பின்னாலேயே பெருமாளும் வந்து அவளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு, அது முடியாததால் தவம் செய்கிறார். நாளடைவில் அவர் மேல் பெரும் புற்று மூடிவிட, அங்கு மாடுகளை மேய்க்கும் கோபாலன் என்பவன் தன்னுடைய பசுவைக் கொண்டு தினசரி அந்தப் புற்றுக்கு பால் அபிஷேகம் செய்ய, அதில் மனம் மகிழ்ந்த பெருமாள் அவனுடைய சந்ததிகளுக்கு தன்னை தினசரி தரிசனம் செய்யும் வரம் அளிக்கிறார் என்பது புராணம்.
அந்தத் தலைமுறையில் வந்த வேங்கட ராமையா என்பவர்தான் அந்த பாக்கியசாலி. தினமும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் வெங்கடராமையாவும், அவரது மகன்களும் எழுந்து குளித்து, நாமமிட்டு, கோவிலுக்குச் செல்கின்றனர்.
"பங்காரு வகிலி' எனப்படும் மூலஸ்தான நடை திறந்தவுடன், பெருமாளின் முதல் தரிசனம் இவர்களுக்குத் தான் கிடைக்கிறது. பின் இவர்கள், பிரதான அர்ச்சகர்களின் வீடுகளுக்குச் சென்று, பூஜை செய்வதற்கு வரும்படி அழைக்கின்றனர். அதன் பின்னரே பிரதான அர்ச்சகர்கள், கோவிலில் தங்கள் கடமையை ஏற்க வருகின்றனர். இரவில் ஏகாந்த சேவை முடிந்த பின், பெருமாளின் அன்றைய இறுதி தரிசனம் வெங்கடராமையாவுக்குக் கிடைத்த பின் தான் நடை அடைக்கப்படுகிறது.
இதுகுறித்து வெங்கடராமையா கூறுகையில், "எனக்கு ஆறு வயதாக இருக்கும் போது, என் தாத்தாவுடன் இந்தச் சேவைகளில் பங்கேற்றேன்' என்று பெருமை பொங்கத் தெரிவிக்கிறார். தற்போது 70 வயதாகும் வெங்கடராமையாவுடன், அவரது மகன் பத்மநாபன், வெங்கடராமையாவின் சகோதரர் மகன் ரமேஷ் இருவரும் இணைந்து இறை பணியை உவப்புடன் செய்து வருகின்றனர்.
நன்றி: தினமலர் இணையதளம்
Comments