நீங்கள் வெகு காலமாக தியேட்டர் பக்கமே சென்றதில்லை என்றாலோ, தமிழ் சினிமா பார்த்து ரொம்ப நாளாகி விட்டது என்றாலோ, இப்பொது வரும் (பெரும்பாலான) தமிழ் படங்கள் குப்பைதான் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தாலோ, நீங்கள் கண்டிப்பாக "களவாணி" படத்தை பார்க்க வேண்டும். என்ன ஒரு படம்! என்ன ஒரு அறிமுக இயக்குனர்!
கிராமத்து படம் என்றாலே மதுரைதான் பின்னணி, அரிவாள், கம்பு, அடிதடி, ரத்தம், களேபரம் என்ற cliche யை மாற்றி ரொம்பவும் வித்தியாசமான ஒரு பொழுதுபோக்கு படத்தை தந்ததற்கு இயக்குனர் சற்குணம் அவர்களுக்கு நன்றி. பச்சைபசேல் என்று இதைப் போல ஒரு கிராமத்தைப் பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டன.
கதாநாயகன் விமல், கதாநாயகி ஓவியா, சரண்யா, இளவரசு என்று அதிகம் நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களை வைத்து இவ்வளவு ரசிக்கும்படி செய்த இயக்குனருக்கு ஒரு "ஓ," இல்லை, இல்லை, ஒரு "ஓஹோ" போடவேண்டும்.
உரம், விவசாயம், இடையே காதல் என்று அழகான கதையும் அற்புதமான பிரசன்டேஷனுமாக வந்திருக்கிறார் புது இயக்குனர் சற்குணம்! துபாய்க்கார அப்பாவுக்கு துடுக்கான பிள்ளை விமல். வெட்டி வேலை, வீம்பு சண்டை, சாயங்கால சரக்கு என்று ஊதாரியாக திரிகிறவருக்கு, பக்கத்து கிராமத்திலிருந்து பள்ளிக்கு வரும் ஓவியா மீது காதல். ஆனால் ஓவியாவின் அண்ணனுக்கும் விமலுக்கும் ஜென்ம பகை. சந்தர்ப சூழ்நிலை விமலை மேலும் கெட்டவனாக்க, வெட்டு குத்தாகிறார்கள் வருங்கால மச்சான்கள். இவ்வளவையும் மீறி இணைந்தார்களா ஜோடி என்பது க்ளைமாக்ஸ்.
LC 112 என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு இவர் எழுதியிருக்கும் புதுக்கவிதை இன்னும் கொஞ்ச நாளைக்கு தஞ்சாவூர் பக்கம் தண்ணீராக ஓடினாலும் ஆச்சர்யமில்லை. ஊர் முழுக்க இதை எழுதி போட்ருவேன் என்று மிரட்டியே ஓவியாவை 'கட்டிக்கிறேன்'னு சொல்ல வைக்கிற விமல், அப்படியே ஒரு நடை ஓவியாவின் அப்பாவிடமே போய் 'மேற்படி ரக நெல்லு இருக்கா' என்று சதாய்ப்பது செம ரகளை. காரின் பின் சீட்டில் இருப்பது அப்பா என்பது தெரியாமலே தனது வீர தீர கதையை சொல்லி மாட்டிக் கொள்வதும், ஓவியா நட்டுவிட்டு போன நாலு கொத்து நாற்றை மட்டும் செம்மையாக 'கவனித்து' அதன் வளர்ச்சியில் தன் காதலை வளர்ப்பதுமாக பின்னி எடுத்திருக்கிறார் விமல்.
இதே இந்த கதைக்காகவே தேர்வு செய்ப்பட்ட ஓவியாவும். போதையில் தன் கண்ணெதிரிலேயே அத்தை மகளை கடத்திப் போகும் விமலை பார்த்து பேஸ்த் அடித்துப் போய் நிற்கிற காட்சியில் சூடு பிடிக்குது கதை. இளசுகளின் 'கடலைக்கு' இடையூறாக வரும் சிறுவனுக்கு கண்ணை கட்டி கண்ணாமூச்சு ஆட விடுவதெல்லாம் கலகலப்பான காதல் பொதுமறை!
அவ்வப்போது விமல் கோஷ்டியின் அரவையில் சிக்கி பஞ்சாமிர்தம் ஆகிறார் கஞ்சா கருப்பு. இவரது காதுபடவே 'பஞ்சாயத்து காலமாகிவிட்டார்' என்று மைக்கில் அறிவிப்பதை கேட்டு திடுக்கிடுகிற போதெல்லாம் கைதட்டல்களால் அதிருகிறது தியேட்டர்.
அகன்ற கண்களில் ஆச்சர்யம் கோபம் பரிதாபம் என்று இந்தப் படத்தின் பெரிய பலம் சரண்யா. 'என் புள்ளைக்கு கிரகம் சரியில்ல. ஆவணி வந்தா டாப்புல போய்டுவான்' என்று நம்பிக்கை காட்டுகிறாரே, அற்புதம்! பிள்ளைக்காக துபாயிலிருந்து வாங்கி வந்த லேப் டாப்பை வேஸ்ட்டா போச்சே என்று கோபத்தோடு விற்க முயலும் இளவரசுவிடம், சூழ்நிலை தெரியாமல் விமல் மாடு மேய்க்க போவதை சொல்லி சரண்யா சிலாகிக்கிற காட்சி அட்டகாசம்.
வில்லனாக அறிமுகம் ஆகியிருக்கும் திருமுருகனின் ஓங்கு தாங்கான உடம்பு ஒன்றே போதும். அதையும் மீறி நடிப்பும் வருவதால் புதுமுக வரவில் தனிமுகம் காட்டுவார்.
காட்சிகளுக்கு தோதாக துண்டு துண்டாக எஸ்.எஸ்.குமரன் போட்டிருக்கும் சின்னஞ்சிறு பாடல்களும் பின்னணி இசையும் ஓகே, டம்ம டம்மா பாடல் தனி கவர்ச்சி.விருந்துக்கு பேர் போன தஞ்சையையே தலைவாழை இலையில் வைத்து பரிமாறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்.
பாக்யராஜூக்கு பிறகு திரைக்கதையில் சென்ட்டம் அடித்திருக்கிற டைரக்டர் சற்குணத்தை 'மனசை திருடிய களவாணியே' என்று பாராட்டலாம். தப்பேயில்லை. 10 ரூபாய் கொடுத்து, கேனத்தனமாக திருட்டு dvd யில் பார்க்காமல், இந்த அழகான, அற்புதமான படத்தை அகன்ற திரையில் ரசியுங்கள். அதுதான் இந்த அறிமுக இயக்குனருக்கு நீங்கள் செய்யும் மரியாதை.
(நன்றி: தமிழ்சினிமா.காம்)
Comments