சிங்கப்பூர் கிட்டத்தட்ட எனக்கு இரண்டாம் வீடு (கவனிக்கவும், இரண்டாம் வீடுதான், சின்ன வீடல்ல) ஆகிவிட்ட நிலையில், ஒவ்வொரு முறையும் என்னுடன் யாராவது ஒரு நண்பரை அழைத்துச் செல்ல விழைகிறேன். இந்த முறை என்னுடன் வந்தது என் நண்பன் சாயி சத்யன்.
எப்படியிருந்தாலும் அங்கு என் நண்பன் ரவி இருப்பதால் அலுவலக வேலைகளை முடித்தவுடன் பொழுது போக எந்தப் பிரச்சினையும் இல்லை.
இந்த முறை அங்கு சென்றபோது யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ் சென்று பார்த்தால் என்ன என்று தோன்றியது. எனக்கு Tom & Jerry க்குப் பிறகு வந்த கார்டூன்களுடன் அதிக பரிச்சயம் இல்லாத காரணத்தினால் அங்கு சென்றால் பொழுது போகுமா என்ற சந்தேகம் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் சென்றது உண்மையிலேயே நல்லதுதான்.
நிறைய ஆங்கிலப் படங்களை தயாரித்து வெளியிட்டுள்ள யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ் தீம் பார்க் ஒன்றை 1990 ம் ஆண்டு, அமெரிக்காவில் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லோண்டோவில் திறந்தது. இந்த தீம் பார்க்கில் யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ் (இனி யு.எஸ்) தயாரித்து வெளியிட்ட படங்களின் பின்னணியில் எல்லா கேளிக்கை விளையாட்டுகளையும் அமைத்து பெரும் வெற்றி கண்டது. ஒரு வேளை திரைப் பட தயாரிப்பு இறங்கு முகமானாலும் இந்த தீம் பார்க்குகளின் மூலம் வரும் வருமானம் கைகொடுக்கும் என்ற யு.எஸ் நிர்வாகத்தின் சிந்தனை சரியான முறையில் வெற்றி பெற்றது.
அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பு யு.எஸ் நிர்வாகத்தை திக்குமுக்காடச் செய்தது. அங்கேயே பலவிதமான கேளிக்கைகளையும், கிளைகளையும் விரிவு செய்த பின்னர், சமீபத்தில் (18, மார்ச் 2010 இல்) சிங்கப்பூரில் இதன் கிளை திறக்கப்பட்டது.
சிங்கப்பூரில் யு.எஸ் அமைந்துள்ள இடம் முழுக்க கடலில் இருந்து reclaim செய்த இடமாகும். பரப்பளவில் சென்னை நகரைவிட சிறிதான சிங்கப்பூரில் இடப் பற்றாக்குறை ஒரு பெரும் பிரச்சினை. எனவே சிங்கப்பூர் அரசு கடலில் கைவைத்தது. இப்போது, யு.எஸ் மற்றும் சுற்றியுள்ள மற்ற கேளிக்கை இடங்கள் லட்சகணக்கான மக்களை தினமும் சுண்டி இழுக்கின்றன.
அண்டை நாடுகளான மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் எப்போதுமே எல்லாவற்றிலும் போட்டிதான். ஆங்கில ஆதிக்கத்திலிருந்து மீண்ட சிங்கப்பூர் 1963 ம் ஆண்டு Federation of Malaysia (Singapore, Sabah, Malaysia & Sarawak) வுடன் இணைந்தது. பிறகு மலேசியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து 1965 இல் தனி நாடாக ஆனது. சிங்கப்பூரை இந்த அளவு உலகின் உன்னதமான நாடுகளில் ஒன்றாக்கிய Lee Kuan Yew அதன் முதல் பிரதமர் ஆனார்.
மலேசியா பரப்பளவில் சிங்கப்பூரைவிட மிகப் பெரிய நாடானதால் அதற்கு சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானமும் மிகப் பெரியதுதான். மலேசியாவைப் போல இயற்கையான சூழ்நிலை சிங்கப்பூரில் மிகக் குறைவு என்றாலும், அதனிடம் இருக்கும் காடுவளங்களை (forest cover) பாதுகாத்துக் கொள்வதில் மிகுந்த கவனமுடன் இருக்கிறது. இந்நிலையில், யு.எஸ் கிளை சிங்கப்பூருக்கு பெரும் அளவு வருமானத்தை ஈட்டித் தரும் என்று அதன் அரசு நம்புகிறது. ஒரு முறை யு.எஸ் விஜயம் செய்தால் அதை நீங்கள் மறுக்காமல் ஒப்புக்கொள்வீர்கள்.
சிங்கப்பூர் யு.எஸ் மொத்தமாக 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மக்கள் பொழுதுபோக்க ஒரு அருமையான இடமாக அமைந்துள்ளது.
யு.எஸ்ஸுக்கு எக்கச்சக்கமான வருமானத்தை வழங்கிய Shrek திரைப்படத்தின் பின்புலமாக அமைந்துள்ள Far Far Away இதன் முதல் பிரிவு. Shrek திரைப்படம் இதுவரை 3 பாகங்களாக வெளிவந்து கோடிகளை ஈட்டியுள்ளது. இதன் பின்னணியில் அமைந்துள்ள Shrek 4-D Adventure ஒரு அட்டகாசமான பொழுதுபோக்கு அம்சம். Shrek படத்தின் கதாபாத்திரங்களை வைத்து பின்னப்பட்டிருக்கும் ஒரு 20 நிமிட பொழுதுபோக்கு ஜாலத்தில் 4-D கைவண்ணத்தால் (கண் வண்ணத்தால்?) நீங்கள் மெய்மறந்து போவீர்கள். 3-D கண்ணாடி அணிந்து திரை அரங்கில் அமரும் நீங்கள் அருமையான தொழில் நுட்பத்தால் Shrek குடன் பறக்க, மிதக்க, ஓட முடிகிறது. Shrek மேல் வீசும் காற்று உங்கள் மேலும் வீசுகிறது. அதன் மேல் விழும் தண்ணீர் துளிகள் உங்கள் மேலும் விழுகிறது, ஒரு இடத்தில Shrek மேல் வரிசையாக சிலந்திகள் விழும்போது நீங்கள் அருவருப்பில் காலை உதறும் அளவுக்கு உன்னதமான தொழில்நுட்பம்.
டினோசார்கள் மூலம் உலகை கதிகலங்கச் செய்த Jurassic Park இதன் இரண்டாவது பிரிவு. இதில் உள்ள Rapids Adventure என்ற விளையாட்டில் எக்கச்சக்கமாக நனைய வேண்டும் என்பதால் இதை தவிர்த்துவிட்டோம். இதிலேயே கெவின் காஸ்னர் (Kevin Costner) நடித்து 1995 இல் வெளிவந்து பெரும் flop ஆன Water World படத்தின் சில காட்சிகளை அதன் செட்டிலேயே re-enact செய்து காட்டுகிறார்கள்.
அடுத்தது நாங்கள் மிகவும் ரசித்தது "New York" பிரிவு. ஹாலிவுட்டின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான Steven ஸ்பீல்பெர்க் (Lights, Camera, Action) அவருடைய படங்களில் வரும் CG மற்றும் Special Effects பற்றி விலாவாரியாக விளக்குகிறார். இதன் பிறகு நாம் ஒரு மிகப் பெரிய அரங்கிற்குள் செல்கிறோம். அங்கு நம் கண் முன்னால் கப்பல் கடலில் மூழ்குகிறது, பெரும் புயல்/மழை நியூயார்க் நகரைத் தாக்குகிறது. அரங்கம் தீ பிடித்து எரியும் போது அதன் வெப்பத்தை நாம் உணர முடிகிறது.
யு.எஸ்ஸின் அடுத்த பிரிவான Ancient Egypt ஒரு மறக்க முடியாத அனுபவம். இதிலுள்ள Revenge of the Mummy என்ற விளையாட்டில் Mummy படத்தில் வந்த முக்கிய காட்சிகளை பின்னணியாக வைத்து ஒரு அதிவேக roller coaster இல் பயணம் செய்யும் போது வயிறு கலங்குகிறது.
இதைத் தவிர ஹாலிவுட், Sci-fi City, Madagascar என்று சுவாரஸ்யம் நீள்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் வித, விதமான உணவு வகைகளை நீங்கள் ரசித்து உண்ணலாம். கிட்டத்தட்ட இந்திய உணவு வகைகளுடன் ஒத்துப் போன Ancient Egypt பிரிவில் உணவை ரசித்தோம்.
யு.எஸ்ஸில் ஒரு முழு நாளை குடும்பத்துடன் ரசிக்க எல்லாவிதமான கேளிக்கைகளும் உள்ளன; மிகப் பிரமாண்டமான அரங்குகள், அருமையான பொழுது போக்கு அம்சங்கள், நல்ல காற்றோட்டமான இடம், சுவையான உணவு...வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?
ஒரு முறை சென்று பாருங்கள்.
Comments
அடுத்த முறை போகும் போது பார்க்கவேண்டும்.
moreover, everytime when you leave, i am unaware that you take somebody with you and go.
Good, next time when you are going to sgp, hopefully i can join you obviously in your sponsorship.