Skip to main content

"Forex ஆன்லைன் டிரேடிங்" மோசடி-

கோவையில் 'ஆன்லைன் டிரேடிங்' நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சுருட்டியதில், தனியார் வங்கிகளும் சம்மந்தப்பட்டிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசடி நிறுவனத்துடன் தொடர்புடைய வங்கி அதிகாரி, தலைமறைவானார். தனியார் வங்கிகளின் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள குற்றப்பிரிவு போலீசார், முதலீட்டாளர்களை உஷார்படுத்தியுள்ளனர்.

சர்வதேச மதிப்பு குறையும் போது வெளிநாட்டு கரன்சிகளை வாங்கி, மதிப்பு உயரும் போது விற்று, முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டித்தருவதாக கூறும் "Forex ஆன்லைன் டிரேடிங்" நிறுவனங்கள், தமிழகத்தில் புற்றீசல் போல தோன்றியுள்ளன. இதுவும் ஒரு வகையான சூதாட்டம் என்பதை அறியாமலும், வர்த்தக எதிர்விளைவுகளை உணராமலும், பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து, பணத்தை இழந்து வருகின்றனர். இவ்வாறு, கடந்த ஓராண்டில் கோவை நகரில் துவக்கப்பட்ட 'யூரோ பே' 'கேவல்' 'கிரீன் லைப்' 'கே.எஸ்.,மென்கன்டைல்' உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொதுமக்களின் முதலீடுகளை சுருட்டிய பின் மூடுவிழா கண்டுவிட்டன. இதுதொடர்பாக, நிறுவனங்களின் அதிபர்கள் 10 பேரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, மேலும் நான்கு பேரை தேடுகின்றனர்.மூடுவிழா கண்ட நிறுவனங்களை தவிர, மேலும் எண்ணற்ற நிறுவனங்கள் நகரில் செயல்படுவதாக போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவற்றின் மீதான புகார் வராததால், செய்வதறியாது திகைக்கின்றனர். இது போன்ற மோசடிகளில் நடுத்தர வர்க்கத்தினர் அதிக பணத்தை இழந்துள்ளனர்.

நிறுவன பதிவில் மோசடி: மோசடியில் ஈடுபடும் 'ஆன்லைன் டிரேடிங்' நிறுவனத்தின் அதிபர்கள், தமது நிறுவனத்தை எஸ்.எஸ்.ஐ.,(ஸ்மால் ஸ்கேல் இன்டஸ்ட்ரீஸ்) என்ற பெயரிலோ அல்லது 'சொசைட்டி' என்ற பெயரிலோ பதிவுச்சான்று பெற்று இணையதளங்களில் வெளியிட்டு முதலீட்டாளரை நம்பவைக்கின்றனர். பின்னர், பணத்தை முதலீடு செய்வோரிடம், நான்கு அல்லது ஐந்து பக்கம் கொண்ட ஒப்பந்த பத்திரங்களில் கையெழுத்து பெறுகின்றனர். அதில், நிறுவனத்துக்கு, கடனாக பணம் வழங்குவதாகவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிய லாபத்துடன் திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் கூறப்பட்டிருக்கும்.முதலீடு செய்வோர், அனைத்து வாசகங்களையும் நன்கு படித்து பார்த்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது கிடையாது; நேரடியாக கையெழுத்திட்டு விடுகின்றனர். ஆரம்ப நாட்களில் சிலருக்கு அந்நிறுவனத்தின் அதிபர், தனது பெயரிலான வங்கிக்கணக்குக்கு உரிய 'செக்'குகளை பின் தேதியிட்டு வழங்குவார். அது தனி நபர் வங்கி கணக்கு சம்மந்தப்பட்டது. இதன் மூலமாக, நிறுவனம் எந்த வகையிலும் ஆவண ரீதியான ஆதாரங்களை கொண்டிருக்காது. மோசடிக்குள்ளாகி பணத்தை இழக்கும் முதலீட்டாளர்கள், 'செக்' மோசடி வழக்கை மட்டுமே கோர்ட்டில் தொடர முடியும். வழக்கு தொடுப்பதற்கும், குறிப்பிட்ட தொகையை, மனுதாரர் 'டிபாசிட்'டாக கோர்ட்டில் செலுத்த வேண்டும். இவ்வளவு 'சிக்கல்கள்' இருப்பதை, முதலீட்டாளர்களில் பலரும் கவனத்தில் கொள்வதில்லை.

பாதுகாப்பற்ற முதலீடு: 'ஆன்லைன் டிரேடிங்' நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன், அந்நிறுவனம் சட்டவிதிகளின்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா? 'ரிசர்வ் வங்கி'யின் உத்தரவாதச்சான்று பெறப்பட்டதா? நிதி வர்த்தக கண்காணிப்புகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டதா? வங்கி கணக்கு நிறுவனத்தின் பெயரில் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல அம்சங்களையும் முதலீட்டாளர்கள் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு அறிந்திருந்தாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், அனைத்து வாசகங்களையும் வரி விடாமல் படித்து, சாதக, பாதக விளைவுகளை அறிந்து கொள்ளவேண்டும்.ஏனெனில், பதிவு செய்யப்படாத, ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறப்படாத நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்வது என்பது, கண்களை மூடிக்கொண்டு, ஆழக்கிணற்றை நோக்கி பயணிப்பதற்கு சமமானது. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் நிதி விவகாரங்களை மட்டுமே ரிசர்வ் வங்கி மற்றும் நிதி வர்த்தகம் தொடர்பான கண்காணிப்பு ஏஜென்சிகள் கண்காணிக்கின்றன. மற்ற நிறுவனங்கள், அவற்றின் பார்வைக்கும், ஆய்வுக்கும் வராதவை. எனவே, நிதி முதலீடுகளில் முதலீட்டாளர்கள் உஷாராக இருப்பது அவசியம்.

தனியார் வங்கிகள் உடந்தை??: தனி நபரால் துவக்கப்பட்ட நிறுவனம், குறுகிய கால இடைவெளியில் கோடிக்கணக்கான ரூபாயை வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்யும் போது, வங்கிகள் கண்காணித்து, சம்மந்தப்பட்ட புலனாய்வு ஏஜென்சிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை. இதை, தனியார் வங்கிகள் கண்காணிப்பதில்லை. இதனால் நிறுவனத்தின் அதிபர்கள், முதலீட்டாளர்களின் பணத்தை தங்களது வங்கி கணக்குக்கு மாற்றிய பின்னர், கூட்டாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 'பினாமி'களின் பெயருக்கும் மாற்றி விடுகினறனர்.மோசடி அம்பலமாகி, முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளித்தாலும், சம்மபந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரிலோ அல்லது அதை நடத்திய நபர்களின் பெயரிலோ, வங்கி கணக்கில் பெரிய அளவிலான தொகை ஒன்றும் இருப்பதில்லை. இதனால், முதலீட்டாளரின் தொகை அப்படியே விழுங்கப் படுகிறது. பணத்தை முதலீடு செய்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே, இது போன்ற மோசடிகளை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்கின்றனர், போலீசார்.

கோவை மாநகர போலீஸ் மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது: எவ்விதமான உழைப்புமின்றி குறுகிய காலத்தில் எளிதாக அதிக பணம் சம்பாதிக்க வேண்டும், என்ற எண்ணம் கொண்டோரால் தான், 'ஆன்லைன் டிரேடிங்' மோசடி அதிகரித்துள்ளது. எந்த ஒரு முதலீட்டு தொகைக்கும் சட்ட ரீதியான, நியாயமான லாபத்தையே எதிர்பார்க்க வேண்டும். அதைவிடுத்து, 40 சதவீதம், 50 சதவீதம் லாபம் பெற முயற்சித்தால், முதலுக்கே மோசம் வந்துவிடும்.'ஆன்லைன் டிரேடிங்' என்பதும் ஒரு வகை சூதாட்டமே. முதலீடு செய்வோர் பணத்தை இழக்கவும் தயாராக இருக்க வேண்டும். பணத்தை இழந்த பின் போலீசில் புகார் அளிக்க ஓடிவருவது, காலம் கடந்த செயல்; சட்ட ரீதியாக மோசடி நிதியை மீட்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஒரு வேளை முதலீட்டு தொகை கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு.இவ்வாறு, செல்வராஜ் தெரிவித்தார்.

வங்கி அதிகாரி ஓட்டம்!கோவை நகரில் 100 கோடி மோசடியில் ஈடுபட்ட 'கே.எஸ்., மெர்கன்டைல்' என்ற ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தின் பெண் அதிபர் சசிரேகா என்பவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரது கணவர் கல்கி, நாகபட்டினத்திலுள்ள தேசிய உடமையாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரையும் மோசடி வழக்கில் சேர்த்துள்ள போலீசார், கைது செய்ய தீவிரமாக தேடிவருகின்றனர்.

தனியார் வங்கிகளின் அதிகாரிகள் தொடர்பு? மோசடியில் ஈடுபட்ட 'ஆன் லைன் டிரேடிங்' நிறுவனங்களின் அதிபர்கள் பெயரிலான வங்கி கணக்குகள் மூலமாக 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது போன்ற பெரிய அளவிலான தொகைகள், குறுகிய கால இடைவெளியில் பரிவர்த்தனைக்கு உள்ளாகும் போது, சம்மந்தப்பட்ட கணக்குக்குரிய நபர்களின் விபரங்களை, நிதி பரிவர்த்தனை கண்காணிப்பு ஏஜென்சிகளுக்கு தெரியப்படுத்துவது வங்கிகளின் கடமை. ஆனால், சில தனியார் வங்கிகள் அது போன்ற உஷார் தகவலை, கண்காணிப்பு ஏஜென்சிகளுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளன. இதனால், மோசடி நிறுவனங்களின் அதிபர்கள் தொடர்ந்து சுருட்டலில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே, மோசடி நிறுவனங்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், சம்மந்தப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்களிடம் விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

-Courtesy: Dinamalar.com

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...