முதலில் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டு எல்லோருக்கும் நலமாக அமைய எல்லாம் வல்ல ஆண்டவன் துணை புரியட்டும்.
பல்வேறு சொந்த காரணங்களால் சென்ற ஜூன் மாதத்திற்குப் பிறகு என்னால் புதிய பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இதற்கு முக்கிய காரணம் என்னுடைய சோம்பேறித்தனம் என்று கூட சொல்லலாம்.
இந்தப் புத்தாண்டில் என்னுடைய முதல் மற்றும் முக்கிய தீர்மானம் என்னுடைய இந்த பதிவுகளை எக்காரணம் கொண்டும் இடைவெளி இல்லாமல் வெளியிடுவதுதான்.
இந்தப் பதிவுகளை நான் சற்று இடைவெளி விட்டு பதியாமல் இருந்தபோது நிறைய நண்பர்கள் என்னுடன் நேரில் சந்திக்கும்போதும், தொலைபேசியில் உரையாடும்போதும் இதைக் குறிப்பிட்டு கேட்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
குறிப்பாக ஒரு அமெரிக்க நண்பர் [நான் முன்பின் சந்தித்ததில்லை] எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி என்ன காரணம் என்று கேட்டுவிட்டு, இணைய தளத்தில கோடிக்கணக்கான பதிவுகள் இருந்தாலும், தமிழில் அவை மிகக் குறைவு என்றும், அதிலும் பெரும்பாலானவை வெறும் reporting ஆக மட்டுமே உள்ளன, அதிலும் முக்கியமாக பதிவாளர்கள் பெரும்பாலோருக்கு நகைச்சுவை உணர்வு மிகவும் குறைவு என்றும் புலம்பியிருந்தார்.
நான் மறைந்த மாபெரும் எழுத்தாளர் சுஜாதாவின் தீவிர வாசகன் என்பதால் சத்தியமாக அவருடைய எழுத்தில் விரவியிருக்கும் நகைச்சுவை உணர்வு என்னையும் தொற்றிக் கொண்டதில் வியப்பேதுமில்லை. அதே சமயம் அவரைப் போல என்னால் எந்தக் காலத்திலும் எழுத முடியாது என்பது நிதர்சனமான உண்மை. இருந்தாலும் இந்த மாதிரி விசாரிப்புகள் ஒரு பெரிய தெம்பைக் கொடுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
Comments