இந்த ஆண்டு எப்படி இருக்கும்? பணம் கொட்டுமா...பதவி உயர்வு வருமா...கார் வாங்குவோமா என் றெல்லாம் தான் நம்மைப் போன்ற சாமானியர்கள் கணக்கு போடுவோம். புத்தாண்டு ஜோதிடத்தை பெரும்பாலும் நம்பி முடிந்தவரை கோயில், குளம் என்று செல்லுவோம், அல்லது நம் சார்பில் நம்முடைய மனைவிகள் அவரவர் இஷ்ட தெய்வங்களை தூக்கத்திலிருந்து எழுப்பி வேண்டுவர் [எங்க வீட்டுல அவருக்கு இப்போ ஏழரைச்சனி]
ஆனால், 2010ல் உண்மையில் கவலைப்பட வேண்டியது எது பற்றி தெரியுமா, 2009 போலவே 2010 சுட்டெரிக்குமா என்பது தான்.
புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம் என்றெல்லாம் விஞ்ஞானிகள் பீதியை கிளப்பிக் கொண்டிருக்கின்றனரே... அது பற்றி ஒவ்வொரு மனிதனும் முன்னெச்சரிக்கையுடன் களம் இறங்க வேண்டிய தருணம் நெருங்கி வருகிறது.
அட, நம்ம தலைமுறையிலா விபரீதம் வரப்போகிறது...? "2012" என்று ஒரு ஹாலிவுட் படம் வந்து நம்மையெல்லாம் பீதி கிளப்பியதே, அதுபோல, உலகம் அழிந்து விடுமோ, என்று தான் நினைக்கின்றனர் பலர். ஆனால், உலக வெப்பமயமாதல் என்பது, கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்களை, இந்த பூமியை கொல்லும் மெகா கொடூரன்.
சர்வதேச அளவில் விஞ் ஞானிகள் கூட்டம் போட்டு, ஆராய்ச்சி செய்து, உலக வெப்பத்தை குறைக்க எவ்வளவோ வழிகளை சொல்லி விட்டனர்; விபரீதங்களையும் பட்டியலிட்டு விட்டனர். முடிவெடுக்க வேண்டியது உலக நாடுகளின் கையில் தான் உள்ளது.
"உலக போலீஸ்காரன்' என்று அழைக் கப்படும் அமெரிக்கா தலைமையில் பணக்கார நாடுகள் ஒரு பக்கம்; இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் ஒரு பக்கம். இரண்டிலும் சேராத பிச்சைக்கார நாடுகள், "வாய் பேசா அடிமைகளாக' இன்னொரு பக்கம்
.
"கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்கிறோம் இல்லே...அதனால், நீங்க தான் அதிகமாக வசதியை குறைக்கணும்; வெப்பமயமாதலுக்கு காரணமான விஷயங்களை கட்டுப்படுத்த வேண்டும்!' என்பது வளரும் நாடுகளுக்கு பணக்கார நாடுகள் இடும் கட்டளை. ஏழை நாடுகளை கேட்கவே வேண்டாம்; சொன்னதை கேட்டு வாய் மூடியிருக்க வேண்டியது தான். இப்படி பிரச்னை எழுந்ததால் தான், சமீபத்தில் டென்மார்க் நாட்டு தலைநகர் கோபன்ஹேகனில் நடந்த, "பருவநிலை மாற்ற விபரீத தடுப்பு மாநாடு' முடிவெடுக்க முடியாமல் தோல்வியில் முடிந்தது.
இந்தாண்டு மீண்டும் கூடிப் பேச போகின்றனார். மீண்டும், "உர்ர்ர்...' என்று தான் ஆளாளுக்கு திரும்பிப் போவர். இவர்கள் காலம் தாழ்த்தலாம்; காத்திருக்கலாம். ஆனால், விபரீதங்கள் காத்திருக்குமா? உலக வெப்பமயமாதலின் பயங்கர விளைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ ஆரம்பித்து விட்டன.
*கடந்தாண்டு வெயில் எப்படி சுட்டெரித்தது என்பது தெரிந்தது தானே; மாலை ஆறு மணிக்கும் கூட, பகல் 12 மணி போல சுரீர் என்று சுட்டது. இந்தாண்டு மட்டும் குறையுமா என்ன? இதுவரை 0.8 சென்டிகிரேட் வெப்பம் அதிகரித்து விட்டது; விஞ்ஞானிகளின் கணிப்பு, வெப்பம் 0.3 சென்டிகிரேட் அதிகரிக்கும் என்பது தான். 2012ல் தான் அதிக பட்ச சுட்டெரிப்பு ஆரம்பிக்குமாம்.
*சுட்டெரித்தால் என்ன விளைவுகள் ஏற்படும்? பனிமலைகள் உருகி வெள்ளம் பெருக்கெடுக்கும். இமயமலையில் கங்கோத்ரி பனிமலையில் இருந்து தான் கங்கை நதி, உற்பத்தியாகிறது. இமயமலை உருகிக் கொண்டிருக்கிறது. இல்லை, உருகவே இல்லை என்று பேச்சுக்கு சொன்னாலும், கங்கையில் வெள்ளப்பெருக்கெடுக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
* சமீபத்தில் படித்த ஒரு செய்தி: கடல் மட்டத்திலிருந்து 15000 மீட்டர் உயரத்திலிருக்கும் லடாக்கில் வெப்பமயமாதலின் விளைவாக இதுவரை கேள்வியே பட்டிராத வகையில் கொசுக்கள் முற்றுகை இடுவதால் அங்குள்ள அப்பாவிகள் முதன்முறையாக ceiling fans வாங்க ஆரம்பித்துள்ளனர். சென்ற மே மாதம் நான் என் குடும்பத்துடன் குன்னூர் சென்றபோது இதை உணர்ந்தேன். அங்கு இரவில் a/c இல்லாமல் உறங்க முடியவில்லை. நாங்கள் தங்கியிருந்த ஒரு டீ எஸ்டேட்டின் விருந்தினர் மாளிகையின் பொறுப்பாளர் இது சமீத்தில் ஏற்பட்ட மாற்றமே என்றார்.
*உலகின் ஒரு பகுதி ஆர்க்டிக் கடலில் முடிகிறது; பனிக்கடலான அது இப்போது உருக ஆரம்பித்து விட்டது. மேற்கு அண்டார்ட்டிக்காவில் பனி உருகி, பென்குயின்கள் உட்பட பனி வாழ் இனங்கள் அழியும் ஆபத்து ஆரம்பமாகி விட்டது.
*இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், அதாவது, 2100 ல் உலகில் கடல் மட்டம் 23 அங்குலம் உயர்ந்துவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், மும்பை போன்ற இடங்களில் கடல் சூழ்ந்து விடும்; கடல் இல்லா பகுதிகளில் எல்லாம் பீச் வந்து விடும்.
*வெப்பமயமாதலின் விபரீதத்தில் நம்மை பெரிதும் அஞ்ச வைக்கப்போவது எது தெரியுமா? கொசு போன்ற சிறிய, "லொள்ளு' பூச்சிகள் தான். இந்த பூச்சிகள் எல்லாம் மெகா சைசுக்கு பெருத்து விடுமாம். மலேரியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போல புதுப்புது நோய்கள் ஆட்டிப் படைக்கும்.
* கடல் நீர் அதிகமாக இருக்கும்; ஆனால், குடிநீர் பெரும் பற்றாக்குறையாகி விடும். 2025ல் இப்பிரச்னை பல நாடுகளில் தலைதூக்க ஆரம்பித்து விடும்.
* கடல் சீற்றம், நகரங்களை விழுங்குவது சிறிது, சிறிதாக பல இடங்களில் ஏற்படும். அதனால், பல நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற வேண்டியிருக்கும்.
* வனங்களில் உள்ள சிங்கம், புலிகளுக்கு ஆபத்து ஏற்படும். விஞ்ஞானிகள் கணிப்பின்படி, 10 லட்சம் வன உயிரினங்கள் அழிந்து விடும் என்கின்றனர்..
நன்றி: தினமலர்
Comments