பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் இன்று அதிகாலை காலமானார். திடீர் மாரடைப்பினால் மரணம் நேர்ந்ததாக தெரிகிறது. 50 வயதான ஜாக்சனுக்கு மூன்று குழந்தைகளும், இரண்டு முன்னாள் மனைவிகளும் உள்ளனர். இதில் இரண்டாவது மனைவியான லிசா மேரி உலகப் புகழ் எல்விஸ் பிரஸ்லியின் [Elvis Presley] மகளாவார்.
பதினோரு வயதில் இசை உலகில் நுழைந்த ஜாக்சன், அவருடைய பெற்றோரின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவதாகப் பிறந்தவர். இவருடைய அசுர சாதனையான "Thriller" ஆல்பம் 1982 இல் வெளியானபோது ஜாக்சனுக்கு வயது 22! இதுவரை இவருடைய பாடல்கள் கொண்ட பிரபல ஆல்பங்கள் 750 மில்லியனுக்கு மேல் விற்பனையாகி வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளன. 13 முறை Grammy அவார்டுகள் பெற்றுள்ள ஜாக்சனுக்கு கெட்ட நேரம் 2005 இல் ஆரம்பித்தது என்று சொல்ல வேண்டும்.
குழந்தைகளுடன் தகாத முறையில் பாலுறவு வைத்துக்கொள்ள முயற்சித்தார் என வந்த செய்தின் மூலம் இவருடைய புகழ் கிடுகிடுவெனச் சரிந்தது. பலமுறை plastic surgery செய்து கொண்டதால் இவருடைய முகம் மிக விகாரமாக மாறியது. சரியான முறையில் சொத்தை பராமரிக்கத் தவறியதால் ஏராளமான சட்டச் சிக்கலில் மாட்டிக்கொண்ட ஜாக்சன் திரும்பவும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டார். அடுத்த ஜூலையில் ஆரம்பிப்பதாக இருந்த இவருடைய பல நிகழ்ச்சிகளின் டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்று தீர்ந்து விட்டன. மே 2010 வரை தொடர்ந்து பல இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஜாக்சன் திட்டமிட்டு இருந்தார்.
இசை மற்றும் நடனத்தில் பல புதுமைகளைச் செய்த ஜாக்சனின் திடீர் மரணம் ஒரு பெரிய அதிர்ச்சிதான்.
Comments