ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போது அரசியல் கட்சிகள் புதிது புதிதாக வியூகங்கள் அமைத்து எதிர் கட்சியினரை தாக்குவார்கள். இந்த முறை பாஜக [BJP] எடுத்துக் கொண்டுள்ள ஆயுதம் ஸ்விஸ் நாட்டு வங்கிகளில் உள்ள கோடிக்கணக்கான கறுப்புப் பணம்!
இந்தியாவைச் சேர்ந்தவர்களால் மட்டும் தற்போது 25 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 70 கோடி வரை சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி, பா.ஜ.,வை குறை கூறியே பிரசாரம் செய்வதென முடிவு செய்து விட்டது. பா.ஜ.,வை பொறுத்தவரை, ராமர் கோவில் போன்ற பிரசாரங்கள் எல்லாம் இனி அவ்வளவு எடுபடாது என தெரிந்து விட்டது.
இதனால் தான் அக்கட்சித் தலைவர் அத்வானி, சுவிஸ் வங்கி விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளார்.
"பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கியில் டிபாசிட் செய்யப்பட்ட பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என அத்வானி எழுப்பிய கறுப்பு பண விவகாரம், தற்போது அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் எதிரொலிக்கத் துவங்கி விட்டன.
இதனால், கறுப்பு பண சுரங்கமாகக் கருதப்படும் சுவிஸ் வங்கிகளைப் பற்றி சற்று விரிவாக அலசப்பட வேண்டியது அவசியம்.
சுவிஸ் வங்கி என்பது சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள தனிப்பட்ட ஒரு வங்கி அல்ல. அங்கு சிறியதும், பெரியதுமாக நூற்றுக்கணக்கான வங்கிகள் உள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானவை யு.பி.எஸ்., [UBS] மற்றும் கிரெடிட் ஸ்யுஸ் [CREDIT SUISSE] என்ற இரு வங்கிகள் தான்.
காரணம் என்ன? சுவிஸ் நாட்டு சட்டப்படி, சுவிஸ் வங்கிகளில் உள்ள கணக்குகள் பரம ரகசியமானது. கணக்கு வைத்திருப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த தகவலும் அளிக்கப்படுவதில்லை.
இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்களின் [Jews] கணக்குகளை வங்கியிலிருந்து பெற்று அவர்களை அழிக்கும் முயற்சியில் ஜெர்மனியின் ஹிட்லர் ஈடுபட்டதால், வங்கிக் கணக்குகளை ரகசியமாக்கும் சட்டத்தை 1934ம் ஆண்டு சுவிஸ் வங்கி கொண்டு வந்தது.
அப்போது முதல் இன்று வரை, இந்த சட்டத்தின் படி கணக்கு வைத்திருப்பவரைத் தவிர, அவர் சார்ந்திருக்கும் நாடு அல்லது புலனாய்வு நிறுவனங்கள் கேட்டால் கூட தருவதில்லை.
எவ்வளவு பணம் இருக்கிறது, யார் டிபாசிட் செய்துள்ளனர் என்பது பற்றிய எந்த கேள்விக்கும் சம்பந்தபட்ட வங்கிகளிடம் இருந்து பதில் கிடைக்காது. டிபாசிட் செய்தவருக்கு மட்டுமே இந்த விவரங்கள் தெரியப்படுத்தப்படும். அதே நேரத்தில், டிபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு முழு உத்தரவாதம் உண்டு. ஒரு வேளை டிபாசிட் செய்தவரின் அனுமதியின்றி, விவரங்களை சம்பந்தபட்ட வங்கிகள் தெரிவித்து விட்டால், சுவிட்சர்லாந்து சட்டத்தில் அந்த வங்கி நிர்வாகத்துக்கு தண்டனையும் உண்டாம்.
சம்பந்தபட்ட வங்கி நிர்வாகம் மீது உடனடியாக வழக்கு தொடரப்படும். ஆறு மாதம் வரை சிறைத் தண்டனையும், கணிசமான அளவு அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
கோடீஸ்வரர்களுக்கு மட்டுமா? சுவிஸ் வங்கியில் கோடீஸ்வரர்கள் மட்டும் தான் கணக்கு துவக்க முடியும் என கூறப்படும் தகவல்களை மறுக்கின்றன, அங்கிருந்து வரும் செய்திகள். 18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும், சுவிஸ் வங்கியில் முறையான தகவல் தொடர்பு மூலம் கணக்கு துவக்க முடியும்.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் டிபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற கோஷம் அதிகரித்து வருகிறது.
ஆனால், அது அத்தனை எளிதான காரியமில்லை. இது குறித்து ஏ.பி.என்., ஆம்ரோ வங்கி இந்திய பிரிவின் செயலாக்க தலைவர் மீரா கூறுகையில், "சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப் பட்ட பணத்தை திரும்ப கொண்டு வர வேண்டுமென தெரிவிக்கப்படும் கருத்துக்கள் வரவேற்கத் தக்கது தான். "ஆனால், அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பெரும் கேள்வியாக உள்ளது. அது, நம் நாட்டிலிருந்து வெளியேறிய பணம். "தாங்கள் ரகசியமாக சேமித்த பணத்தை திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளதால், அதை சேமித்து வைத்துள்ளவர்கள் முன்கூட்டியே அப்பணத்தை எடுத்து மாற்றி விட வாய்ப்புள்ளது' என்கிறார்.
பணத்தை திரும்ப கொண்டு வருவதற்கு சர்வதேச நிதி அமைப்புகள், வளர்ந்த நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. இதை சட்டப்படி முறையாக அணுகினால், ஏதாவது மாயாஜாலம் நடக்க வாய்ப்புள்ளது. ஆனால், பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது தான் குழப்பம்.
தீர்வு கிடைக்குமா? தற்போது எழுந்துள்ள கறுப்பு பண விவகாரம், வெறும் தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் தானா அல்லது தேர்தலுக்கு பின்னும் அது குறித்து பேசப்படுமா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி எப்போதும் போல இதை மறுத்து, இப்படி ஒரு விஷயம் இருந்தால், பாஜக [BJP] அவர்கள் ஆட்சி காலத்தில் இதை ஏன் நடைமுறைப் படுத்தவில்லை என சிறு பிள்ளைத்தனமாக இந்தியாவின் வருங்கால பிரதமர் ராகுல் காந்தி கேட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த Global Financial Integrity [GFI] என்ற ஒரு தனியார் தொண்டு நிறுவனம் [NGO] வெளியிட்டுள்ள ஒரு தகவலை நேற்று Times of India செய்தித் தாள் [Illicit Financial Flows from Developing Countries] வெளியிட்டு பரபரப்பை உண்டாகி உள்ளது. அதில், வருடாவருடம் கிட்டத்தட்ட 23 லிருந்து 27 பில்லியன் டாலர் வரை [கிட்டத்தட்ட ரூ. ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் கோடியிலிருந்து ஒரு லட்சத்து முப்பத்தையாயிரம் கோடி வரை]இந்தியாவிலிருந்து கறுப்புப் பணம் திருட்டுத்தனமாக [Illicit] வெளிநாடுகளுக்கு, குறிப்பாக ஸ்விட்ஸர்லாந்துக்கு, கொண்டு செல்லப்பட்டு அங்கு அது பல்வேறு வங்கிகளில் டிபாசிட் செய்யப்படுகிறது என்பதை ஆதாரபூர்வமாக இந்த நிறுவனம் பதிவு செய்துள்ளது.
இந்த தகவலின்படி, உலக அளவில் இந்தியா 5 வது இடத்திலிருக்கிறது [ஆஹா, என்ன ஒரு பெருமையான இடம்]. இந்தியாவுக்கு முன்னால் ரஷ்யா, மெக்ஸிகோ, சவுதி அரேபியா ஆகிய நாடுகளும், முதல் இடத்தில சைனாவும் இருக்கின்றன.
நம் நாட்டில் இன்னும் ரூ.1000 நோட்டை கண்ணால் பார்க்காதவர்கள் கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில் இந்த தகவல்களைப் படிக்கும்போது மிகுந்த வருத்தமும், எரிச்சலும் ஏற்படுகிறது. இந்த கறுப்புப் பணத்தை கொண்டுவர முடியுமா, முடியாதா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க, நம் எல்லோருக்குமே இதுவும் ஒரு தேர்தல் ஸ்டண்ட்தான் என்பது நன்றாகவே தெரியும்.
Comments