தேர்தல் வியாபாரத்தில் குதித்துள்ள நம் வேட்பாளர்கள் ஜோசியத்துக்கும், ஹோமங்கள் பண்ணுவதற்கும் வாரியிறைத்து வருகின்றனர். தேர்தல் வந்து விட்டாலே, லட்சக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்களுக்கு கூடுதல் பணம், பொருளுடன் மூன்று மாதம் வேலை கிடைத்து விடுகிறது. "ஓட்டு போடுங்கம்மா' என்று கூவுவதற்கு ஏகப்பட்ட ஏழைப் பெண்களுக்கு தினமும் குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை கிடைக்கிறது; கூடவே, பிரியாணி பொட்டலங்களும்.
கடவுளுக்கு் மனு போடுகின்றனர்; கடவுளை திருப்திப்படுத்த ஹோமங்களை செய்கின்றனர். தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய சகஸ்ர ஹோமம், அதிருத்ர ஹோமம், தங்கள் கட்டுப்பாட்டில் அடுத்தவர்களை வைத்துக்கொள்ள "வாஷி கரண' ஹோமம், அடுத்தவர் கண்டிப்பாக தோல்வி அடைய "விபரீத பிரத்யங்கர' ஹோமம் என்று விசேஷ ஹோமங்கள் செய்யப்படுகின்றன. இதற்காக, வேத பண்டிதர்கள் சிலர், "போர்டு' மாட்டாத குறையாக சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், டில்லி, மும்பை, கோல்கட்டா போன்ற நகரங்களில் உள்ளனர். பெரும்பாலும், சென்னை, பெங்களூரு நகரங்களில் இருந்துதான் இப்படிப்பட்ட வேத மந்திர குழுக்களை தேசிய அரசியல் கட்சிகள், ஹோமங்களை செய்ய நியமிக்கின்றன.
சில ஹோமங்கள் 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை இடைவிடாமல் செய்வதும் உண்டு. ஹோமங்களுக்கு குறைந்தபட்சம் 10 லட்சத்தில் இருந்து அதிக பட்சம் 50 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. அதிகபட்ச ஹோமங்களை செய்வது, கோடீஸ்வர வேட்பாளர்கள் மட்டுமே. கட்சிகளும் இப்படிப்பட்ட ஹோமங்களை மணிக்கணக்கில் செய்ய ஆர்டர் தருகின்றன. கடந்த தேர்தலை விட, இந்த முறை ஹோமங்களுக்கான ஆர்டர் 30 சதவீதம் அதிகரித்து உள்ளதாக பெங்களூரை சேர்ந்த பிரபல வேத பண்டிதர் கூறுகிறார். டில்லி, மும்பையில் இருந்தும் கூட ஆர்டர்கள் வருகின்றனவாம். பல கட்சிகளை சேர்ந்தவர்கள் ஹோமத்துக்கு ஆர்டர் தந்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிலரும் இதில் அடங்குவராம்.
லோக்சபா தேர்தல் முடியும் அடுத்த மாதம் 13 ம் தேதி வரை, முக்கிய நகரங்களில் ஹோமங் கள் தினமும் நடக்கின்றன. பல வேட்பாளர்களுக்கு ஆர்டர் தந்தும் வேத பண்டிதர்கள் கை விரித்து விட்டனர்.
ஐ.டி., நிறுவனங்களின் வேலைகளுக்கு மட்டும் தான் "அவுட்சோர்சிங்' நடக்கிறதா என்ன? ஹோமங்கள் செய்வதற்காக சென்னையில் இருந்து மும்பைக்கும், பெங்களூரு நகரில் இருந்து மும்பைக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து கோல்கட்டாவுக்கும் வேத குழுக்கள் பறப்பதுண்டு. ஹோமங்கள் தவிர, ஜோதிடம் பார்ப்பதும், அரசியல்வாதிகள், வேட்பாளர்களிடம் அதிகரித்து விட்டது. கையை பிடித்து பார்த்து சொல்ல, ஜாதகம் பார்த்து சொல்ல 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பிரபல ஜோதிடர்கள் வாங்குகின்றனர்.
இப்படி ஹோமங்கள், ஜோசியத்துக்கு மட்டும் இந்த தேர்தலில் 500 கோடி ரூபாய் வரை பிசினஸ் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்.காம்
Comments