உலகில் பல இடங்களில் நடக்கும் அக்கிரமங்களில் இது புது வகை குற்றம்: மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் சில நகரங்களில் கில்லாடித்தனமாக ஒரு கூட்டம் பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள் பொழுதுபோக்கும் இடங்களில் அவர்களை அணுகி விலையுயர்ந்த செல் போன், ஐ பாட் ஆகியவற்றை பரிசாகப் பெற வேண்டுமென்றால் ஒரு form இல் அவர்களுடைய பெயர், முகவரி, தொலைபேசி எண், படிக்கும் பள்ளி/கல்லூரியின் விவரம், பெற்றோர் பெயர், அவர்கள் வேலை விவரம், வேலை செய்யும் இடம், மாணவர்களின் பிரியமான நிறம், விளையாட்டு, பிடித்த நடிகர் என அத்தனை புள்ளி விவரங்களையும் பெற்று விடுகிறது.
பிறகு இந்த கூட்டம் மிகத் திறமையாக திட்டம் தீட்டி அந்த மாணவர் கும்பலில் பணக்கார மாணவர்களாகத் தேர்வு செய்து, நேரம் பார்த்து அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்து உங்களயுடைய வாரிசை நாங்கள் கடத்தி விட்டோம், அவர்களை மீட்க வேண்டுமென்றால் உடனடியாக உங்கள் வீட்டுக்கு வெளியே நிற்கும் கருப்பு வேனின் பின்னால் ஒரு பெட்டியில் நகையோ அல்லது பணமோ அல்லது இரண்டுமோ வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட வேண்டும் என மிரட்டி அவர்களுடைய வாரிசுகளின் விவரங்களை வரிசையாக சொல்லும் போது பெற்றோர் மிகவும் பயந்து விடுகின்றனர்.
இந்த கடத்தல் கும்பல் பெற்றோர்க்கு யோசிக்க அவகாசம் கொடுக்காமல் செயல்பட்டு, புத்திசாலிதனமாக பணம் மற்றும் பொருளை கைப்பற்றி விடுகிறது.
இதையும் மீறி ஒன்று, இரண்டு பேர் எங்கள் மகன்/மகள் உன்னிடம் இருப்பதற்கு என்ன சாட்சி என்று கேட்டால் அவர்களை மிரட்டுவதற்கு அந்த வாரிசுகளின் தனிப்பட்ட விவரங்களை சொல்லி, மேலும் ஏதாவது தாமதம் செய்தால் வாரிசுகளின் உயிர் போய்விடும் என மிரட்ட, பயந்து போகும் பெற்றோர் உடனடியாக பணயத் தொகையை கொடுத்துவிடுகின்றனர்.
பின்னர் அந்தப் பிள்ளைகள் படிக்கும் பள்ளி/கல்லூரியில் கேட்கும்போது அப்படி எதுவும் விபரீதம் நடக்கவில்லை எனதெரிந்து ஏமாறுகிறார்கள். இப்படிப்பட்ட கேஸ்கள் பெரும்பாலும் காவல்துறையை அணுகுவதேயில்லை. பிள்ளைகள் கடத்தப்பட்டு விட்டனர் என நினைத்து பணம் மற்றும் பொருளை இழந்தோர் ஏராளம் என்கிறது நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை.
Comments