ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள தசாவதாரம் படம் தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல் என்று சொல்வேன்.
கமல் 10 வேடங்களில் வருவது ஒரு பக்கம் என்றால், CG எனப்படும் special effects செய்தவர்கள், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒப்பனை கலைஞர்கள், பின்னணி இசை அமைத்த தேவிஸ்ரீ பிரசாத், முக்கியமாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மற்றும் பல தொழில்நுட்பக் கலைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முதல் frame இல் ஆரம்பித்து கடைசிவரை அட்டகாசம் செய்திருக்கிறார்கள்.
இந்த 10 வேடங்களையும் கமல் கோர்த்திருக்கும் விதம் அசாத்தியமானது. 12 ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கும் கதை கோடுபோட்டது மாதிரி பயணம் செய்து கிளைமாக்சை எட்டும்போது ஆச்சரியம் மேலோங்குகிறது.
அசின் தொட்டுக் கொள்ள ஊறுகாய் மாதிரி வந்தாலும் நல்ல ஜிலுஜிலு எலுமிச்சம் பழம் மாதிரி வருகிறார். ரொமான்ஸ் காட்சிகள் குறைவு என்றாலும் படத்தின் ஓட்டத்தை பாதிக்கக் கூடாது என்று இயக்குனரும் கமலும் மெனக் கெட்டிருப்பது தெரிகிறது.
படத்தில் ஏராளமான நிறைகள் இருப்பதால் வெகு சொற்பமான குறைகளே தெரிகின்றன. அவற்றில் முக்கியமானது: திரைக்கதை. ஜீனியஸ் கமலுக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து வசனம், திரைக்கதை ஆகியவற்றை நீங்கள் அந்தந்த துறையில் வல்லுனர்களிடம் விடுவது நல்லது.
படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அதன் technical wizardry எனப்படும் மேலோங்கிய தொழில் நுட்பம் நச்சென நம் மனத்தில் பதிகிறது. கமலின் 10 வேடங்களில் என் ஓட்டு துப்பறியும் நிபுணராக வரும் நாயுடுவுக்கே. மனிதர் சும்மா கலக்கி விட்டார். இரண்டாவது இடம் பூவராகவனுக்கு.
எல்லோரும் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம்.
Comments