Skip to main content

ஆஸ்கர் அவார்ட் திரைப் படங்கள்!



என்னுடைய குழந்தைகளுக்கு எக்ஸாம்ஸ் முடியவேண்டும் என்ற காரணத்தினால் கடந்த இரண்டு மாதங்களாக ஆங்கில படம் dvd எதுவுமே பார்க்காமல் (என்ன ஒரு தியாகம்!) இருந்த நான், தற்போது சுதந்திர மனிதனாகி, சமீபத்தில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிய, அள்ளாத சில அருமையான படங்களை பார்த்தேன். தினமும் இரவு, சகட்டு மேனிக்கு படங்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் சில gems இருந்த படியால் அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணம்.

-முதலில் Run Lola Run என்ற ஜெர்மானியப் படம் (ஆங்கில டப்பிங் மற்றும் வாய்ஸ் ஓவர்). 1998 ம் வருடம் வந்த இந்த அருமையான படம், பத்து வருடங்களுக்கு முன்னமே என்ன ஒரு சிந்தனை!

படம் அட்டகாசமான இசை, ஒளிப்பதிவு, இயல்பான நடிப்பு என எல்லா department களிலும் ஸ்கோர் ஓ ஸ்கோர் செய்கிறது!
கதையின் நாயகி லோலா, அவள் நண்பன் மானி, மற்றும் அவள் தந்தை, ஒரு பிச்சைக்காரன் என்று மிக சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு சும்மா கபடி விளையாடியிருக்கிறார் இயக்குனர்!

மானி கஞ்சா விற்கிறான், விற்ற பணத்தை தொலைக்கிறான். 100,000 மார்க்! (அப்போதைய ஜெர்மானிய கரன்சி) . கஞ்சா வியாபாரி தன்னை தீர்த்து விடுவான் என்ற பயத்தில் லோலாவிடம் தொலைபேசியில் கூப்பிட்டு புலம்பிகிறான்.லோலா அவனைத் தேற்றுகிறாள். மானியோ இன்னும் இருபது நிமிடங்களில் பணம் வரைவில்லை என்றால், அருகிலிருக்கும் ஒரு சூப்பர் மார்கட்டை கொள்ளை அடிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்கிறான். லோலா எப்படி அவனை காப்பாற்றுகிறாள்?

தன்னுடைய பணக்கார தந்தையைப் பார்த்து கெஞ்சுகிறாள். அலுவலகத்தில் பார்ட்னருடன் ஜல்சா செய்து கொண்டிருக்கும்போது லோலா வந்துவிட்ட ஆத்திரத்தில் அவள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார் அந்த பாசமான (!) அப்பா. 20 நிமிடம் முடியும் தருவாயில், மானி வேறு வழியில்லாமல் எதிரே இருக்கும் சூப்பர் மார்க்கட்டினுள் நுழைந்து கொள்ளை அடிக்க சித்தமாகிறான். லேட்டாக வரும் லோலாவும் அவனுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட, இருவரும் பணத்துடன் தப்ப நினைக்கும் போது போலீஸ் வருகிறது. தமிழ் படம் மாதிரி சீறிப் பாய்ந்து சண்டையெல்லாம் போடாமல் போலீசாரால் சுடப்பட்டு பொத்தென விழுந்து சாகிறாள் லோலா!

ஏண்டா டே, இதெல்லாம் ஒரு படமா என்று கேட்க தோன்றுகிறதா? படம் இங்கே முடியவில்லை.

மறுபடியும் முதல் சீன்; அதே மானி, அதே லோலா, அதே பணத் தேவை. இந்த முறை அலுவலகத்தில் கேப்மாறித்தனம் செய்யும் தந்தையின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டி பணத்தை பெற்றுக் கொண்டு, லோலா ஓடுகிறாள். மானி கொள்ளையை தடுத்து அவனுக்கு பணத்தைக் கொடுக்க நினைக்க முற்படும்போது, ரோடின் குறுக்கே வரும் மானியின் மீது ஒரு ஆம்புலன்ஸ் மோதி மானி பரமபதம் அடைகிறான்! லோலா திகைத்துப் போய் கதறுகிறாள். போடாங்க..இதெல்லாம் ஒரு படமா என்று சொல்லத் தோன்றுகிறதா? படம் இங்கேயும் முடியவில்லை!

ஒரே படத்தை வெவ்வேறு முடிவுகளுடன் கொடுத்து உனக்கு வேண்டுமென்கிற முடிவை எடுத்துக்கோ என்கிறார் இயக்குனர். இதற்கு அப்பறம் தமிழில் வந்த 12 B, விருமாண்டி போன்ற படங்கள் ரன் லோலா ரன் பாதிப்புகள் என்று சொல்லலாம்.படத்தில் இப்படி வித்தியாசமான பல (!) முடிவுகள். படத்தை நீங்களும் ரசிக்க வேண்டும் என்பதால் எல்லா முடிவுகளையும் நான் சொல்லவில்லை.






ஓகே, அடுத்து நான் மிகவும் ரசித்த ஒரு படம், ENCHANTED. சந்தோஷப்படுத்துவது, குஷிப்படுத்துவது, மெய்மறக்கச் செய்வது என்று இந்த ஆங்கில வார்த்தையின் அர்த்தத்துக்கு மிகப் பொருத்தமான படம். வால்ட் டிஸ்னி படம் என்றாலே அது எல்லோருமே ரசிக்கும் மாதிரிதான் இருக்கும் என்பதற்கு இதுவும் விதிவிலக்கில்லை.

போன வருடம் வந்த இந்த படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. நேரமே இல்லாமல், சதா சர்வகாலமும் சுற்றிக் கொண்டிருக்கும் நம்மைப் போல பலருக்கும் இந்த படம் ஒரு அருமையான ரிலாக்சேஷன்.

கார்டூன் உலகிலிருக்கும் கதாநாயகி ஜிசல், மண நாளுக்கு முன்னால் மந்திரக் கிழவி ஒருத்தியால் பாதாளத்தில் தள்ளி விடப்படுகிறாள். ஆச்சரியமாக, மனித உரு பெற்று New York நகரில் விழுகிறாள். அதற்கப்புறம் ஒரே கலாட்டாதான்! மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவளுக்கு ஆச்சரியமாக இருக்க, ஒரு பெண் குழந்தையுடன் தனியே வசிக்கும் கதாநாயகன், ராபர்ட், அவளைக் காப்பற்றி வீட்டுக்கு அழைத்து சென்று, மெதுவாக அவள் மேல் காதலும் கொள்கிறான்.

ஜிசல் மணப்பதாக இருந்த கார்டூன் இளவரசன் எட்வர்ட் அவளைத் தேடி, மனித உருவில் நியூயார்க் வருகிறான். அவனோடு வரும் ஒரு குள்ளன் (மந்திரக் கிழவியின் கையாள்) ஜிசலைக் கொன்றுவிட வேண்டுமென அலைகிறான். கடைசியில் சுபம்.

மிகவும் குழந்தைத்தனமான கதை, அரைவேக்காடு கதாபாத்திரங்கள் என்று நம்மை குச்சி மிட்டாய் சப்ப வைத்து, தமிழ் சினிமா போல பாட்டு பாடி, ஏக கலாட்டாவாகப் போகிறது படம். எந்த லாஜிக்கும் பார்க்காமல் ஜாலியாக என்சாய் பண்ண வேண்டிய ஒரு படம்.



அடுத்தது ஒரு வித்தியாசமான மசாலாப் படம். No Country for Old Men. போன வருடம் ஆஸ்கர் விருதுகளை அள்ளிய படம். வன்முறைக் காட்சிகள் நிறைந்த ஒரு வன்முறையான படம். கொலை, கடத்தல், அடிதடி எல்லாம் செய்யும் ஒரு மெக்சிக கும்பல் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு செத்து கிடக்கிறார்கள்.

கதாநாயகன் (?) லெலின் மாஸ் ஒரு வேட்டைக்காரன். வேட்டையாட வரும்போது இந்த கொலைகாரர்களின் பிணக் குவியல பார்க்கிறான். அந்த கும்பலில் ஒரு பிணம் அருகே, ஒரு பெட்டியில் கத்தை, கத்தையாய் பணம். அவன் என்ன நம் தமிழ் கதாநாயகனா, அந்த பணத்தை எடுத்து தான,தருமம் செய்ய? என்னைப் போல ஒரு எதார்த்தமான இளைஞன் (சரி, சரி). பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறான், பணபெட்டியில் சனி இருப்பது தெரியாமல்.

அந்தப் பணத்தை தேடி ஒருபுறம் போலிஸ், ஒரு புறம் இறந்த அந்த கும்பலைச் சேர்ந்த, இறக்காத வேறு சில கொலைகாரர்கள், மறுபுறம், கண்ணில் பட்ட எல்லோரையும் போட்டுத் தள்ளும் கொலைவெறி பிடித்த ஆண்டன் சிகுர் என்னும் சைகோ ஒருவன். இவர்கள் எல்லோரிடம் இருந்தும் மாஸ் தப்பிகிறானா? விறுவிறுப்பான காட்சிகள், ரத்தமயமான காட்சிகள், வன்முறைக் காட்சிகள் என்று மாறி, மாறி வந்தாலும் படம் மிகவேகமாக போகிறது.

ஒரு சிலர் இந்த ஆண்டன் சிகுர் பாத்திரத்தை சைக்கோ படத்தின் கதாநாயகன், நார்மன் பேட்ஸ் உடனும், வேறு சிலர், சைலன்ஸ் ஆப் லாம்ப்ஸ் படத்தின் கதாநாயகன், ஹானிபால் லேக்டர் உடனும் ஒப்பிட்டு பேசினாலும், எனக்கென்னவோ அந்த கதாபாத்திரம் அவ்வளவு சிறப்பாக தெரியவில்லை. படம் பூராவும் காரணமே இல்லாமல் ஆடு,மாடுகளை கொல்வதற்கு பயன்படுத்தும் ஒரு கொடூரமான ஆயுதத்துடன் அலையும் அந்த கொலைகாரனின் பின்புலம் விளக்கபடவேயில்லை.

படங்களின் பட்டியல் தொடரும்.....

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்