இதற்கு முன் பலமுறை மலேசியா வந்திருந்தாலும் பதுகை (Batu Caves) முருகன் கடைக்கண் பார்வை என் மேல் படாததால் அவர் தரிசனம் கிட்டவில்லை. இந்த முறை எப்படியாவது அவரைப் பார்த்து விட வேண்டுமெனத் தீர்மானித்து ரவியுடன் 22 ம் தேதி காலையில் சென்று விட்டோம். கோலாலம்பூரில் இருந்து 10 கீ.மீ தூரம் கூட இல்லை. மலை அடிவாரத்தில் இறங்கும்போதே 140 அடி உயரத்தில் தகதகக்கும் தங்க நிறத்தில் மிக பிரமாண்டமான முருகன், எனக்கு முன்னால் நீங்கள் எல்லாம் தூசுடா என்பது மாதிரி மிக உயர்ந்து நிற்கிறார்.
கிட்டத்தட்ட 250 டன் இரும்பும், 1500m3 (cubic meter) கான்க்ரீடும், 300 லி தங்க பெயிண்டும் சேர்ந்து சுமார் 2 கோடி (இந்திய மதிப்பில்) செலவில் அமைக்கப்பட்ட இந்த முருகன் உலகிலேயே மிக உயரமான ஹிந்துக் கடவுள் என்ற பெருமை பெறுகிறார்.
1890 ம் ஆண்டு தம்புசாமி பிள்ளை என்பவரால் இங்கு முருகன் (மூலவர்) பிரதிஷ்டை செய்யப்பட்டார். பிறகு, 1892 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தைப் பூசம் அன்றும் இந்த கோயிலில் மிக விசேஷமான பூஜைகள் இன்று வரை தொடர்ந்து நடந்தேறி வருகின்றன.
இந்த சுண்ணாம்புக்கல் குகை அமைப்பு கிட்டத்தட்ட 400 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சரித்திரம் சொல்லுகிறது. தரை மட்டத்திலிருந்து 130 மீ உயரத்தில் இருக்கும் இந்த குகைக்கு செல்ல செங்குத்தான 270 படிகளைக் கடக்க வேண்டும் (மூச்சு வாங்க ஏறினோம்). மிகச் சின்ன குடவரைக் கோயிலான இதில் மூர்த்தியும் சிறியவராகவே இருக்கிறார் என்றாலும் கீர்த்தி ரொம்பப் பெரியது என்பதால் ஒவ்வொரு தைப் பூசம் அன்றும் கிட்டத்தட்ட 15 லட்சம் பக்தர்கள் கூடுவது ஒரு சாதனை என்கிறார்கள். மலேசியா அரசாங்கம் தை பூசம் அன்று அரசு விடுமுறை தினம் என்று அறிவித்து விட்டது.
முருகன் தரிசனம் கிடைத்ததால்தான் என் மலேசியா பயணத்தின் business objective முழுமையாக ஈடேறியது என்று நம்புகிறேன்.
Comments