நேற்று இரவு சுமார் 10 மணிக்கு சுஜாதா காலமான செய்தி, எனக்கு சற்று தாமதமாக இன்று காலைதான் தெரிந்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக அவருடைய எழுத்துக்களை விடாமல் துரத்தும் ஒரு ரசிகன் என்கிற முறையில் என்னால் மனப்பூர்வமான அஞ்சலியை மட்டுமே செலுத்த முடியும்.
ஒரு எழுத்தாளனின் நடை, எழுத்தாக்கம், உணர்வு இவற்றையெல்லாம் மீறி எனக்கு (என்னைபோன்ற எத்தனையோ பேருக்கு) சுஜாதா பல விஷயங்களில் ஒரு மானசீக குரு என்றுதான் சொல்லவேண்டும்.
அவர் நன்றாக இருக்கிறது என்று கைகாட்டிய நிறைய கவிதைகளை, கதைகளை வாசித்திருக்கிறேன்: அவரால் சிலாகிக்கப்பட்ட திரைப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன்;அவர் சொன்ன கட்டுரைகளை இணையதளத்தில் தேடிப்பிடித்து download செய்து படித்திருக்கிறேன்; அவர் வசனம் எழுதிய ஒரே காரணத்தால் விசில், கண்ணெதிரே தோன்றினாள் போன்ற குப்பையான படங்களையும் பார்த்திருக்கிறேன்.
இன்றைய நிலையில் தமிழ்நாட்டிலே பிறந்த நிறைய குழந்தைகளுக்கு (என் வாரிசுகள் உட்பட) தமிழ் படிக்கவே தெரியாத காலத்தில், சுஜாதாவின் எழுத்து மூலம் நிறையவே கற்றுக்கொண்டேன் என்றால் அது மிகையாகாது. அவர் தந்தை இறக்கும்போது அவருக்கு வயது 93 என்று படித்திருக்கிறேன். அவருடைய தந்தையின் மறைவைப் பற்றி குமுதத்தில் எழுதும்போது, " மறுபடியும் அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை என்ற செய்தி வர, அவசர அவசரமாக KPN பஸ் பிடித்து (அப்போது சுஜாதா பெங்களூரில் இருந்தார்) சேலம் சென்றேன். கவலையுடன் இருந்த என்னைப் பார்த்த கண்டக்டர் என்ன சார அடிக்கடி வரீங்க?
என்றார்.அப்பாவுக்கு உடம்பு சரியில்லைப்பா என்றேன். ஓகோ, அப்படியா, டே அந்த மொளகா மூட்டைய பாத்து எறக்குடா," அந்த சமயத்திலும் அவருடைய நகைச்சுவை உணர்வு தலைதூக்கியதை ரசித்திருக்கிறேன்.
பல வருடங்களுக்கு முன், அவர் BEL நிறுவனத்தில் பணி புரியும் போது LTC எடுத்துக்கொண்டு மனைவி, குழந்தைகளுடன் காரில் ஊர் சுற்றியதைப் பற்றி (தமிழ்நாடு 2000 மைல்) எழுதும் போது, "வீட்டை விட்டு வெளியே வந்து கொரமங்கலாவை நெருங்கும்போது ஸ்ஸ்ஸ்ஸ்.... என்ற சத்தம் கேட்கவே, ஐய்யோ கார் டயர் பஞ்சராகிவிட்டதா என்று பதட்டத்துடன் கீழே இறங்கிப் பார்த்தால். ஒன்றுமில்லை. என் இரண்டாவது மகன் நான்தான் அப்படி சத்தம் செய்தேன் என்றான். ஏற்கனவே லேட் என்பதால் அவனை சவட்டும் எண்ணத்தை ஒத்திப் போட்டுவிட்டு காரை ஸ்டார்ட் செய்தேன்" என்று எழுதி இருப்பார்.
நான், என் நண்பன் நாகு (என்னைபோலவே இன்னொரு தீவிர சுஜாதா ரசிகன்) எல்லோருக்கும் அப்போது இருந்த ஒரு பேராசை: சுஜாதா கதை வசனம் எழுத, கமல் நடிக்க, இளையராஜா இசை அமைக்க ஒரு படம் வரவேண்டும் என்பதுதான். அது விக்ரம் படம் மூலம் நிறைவேறினாலும், துரதிருஷ்டவசமாக அந்த படம் ஓடாமல் போனாலும் அதை எவ்வளவோ முறைப் பார்த்து ரசித்தோம்.
அவர் எழுத்துக்கு என்றும் வயதாவதில்லை. நான் சாகும் வரை அவற்றை படித்து ரசிக்கத்தான் போகிறேன்.
அவருடைய ஆன்மா எல்லாம் வல்ல (அவருடைய இஷ்ட தெய்வமான) ஸ்ரீரங்கநாதனின் பாதங்களை அடைத்திருக்கும் என நினைக்கிறேன்.
Comments