என்னுடைய மேற்பட்ட புகைப்படத்தைப் பார்த்தவுடன், உங்களில் பலருக்கு நான் ஏன் வசந்த் & கோ முதலாளி மாதிரி போஸ் கொடுக்கிறேன், அப்படி என்ன பெரிதாக சொல்லிவிடப் போகிறேன் என்று மனதில் கேள்வி எழும். என்னுடைய office இல் சமீபத்தில் photo shoot ஒன்று எடுத்தோம், எங்களுடைய VirtuIndia Office brochure க்காக. அதற்கு வந்த photographer போனால் போகிறது என்று என்னை எடுத்த photo வை உங்களுக்கு வேறு எப்படி காண்பிப்பது?
என் படத்தைப் போட்டு விட்டதால் கொஞ்சம் சுயபுராணம் பாடினால் என்ன என்று தோன்றியது! சமீபத்தில் பார்த்த "கல்லூரி" படத்தில் வருவது போல என்னுடைய கல்லூரி காலத்தில் ஜொள்ளிக் கொண்டு அலைந்தது பற்றி சொல்லலாம்.
பள்ளியில் படிக்கும் போது ஜெயந்தி என்று ஒரு பெண் கூடப் படித்தது. படிப்பில் ஒன்றும் பெரிய சுட்டி இல்லை (அதாவது அந்தப் பெண், நான் எப்போதுமே சுட்டிதான் ஹா ஹா ஹா) என்றாலும், பார்க்க நல்ல களையாக இருந்த ஒரு முகம். பள்ளியில் இருந்து கல்லூரிக்கு வந்த பின்னும் வீடு ஒரே ஏரியா என்பதால் கொஞ்ச நாள் டாவடித்துவிட்டு விட்டுவிட்டேன்.
பிறகு, நண்பன் சாலைமணி மாதவன் (நண்பா, எங்கேயடா இருக்கிறாய்?) தயவால் மதுரையில் இருக்கும் கூடலழகர் பெருமாள் கோவிலை ஒரு மார்கழி மாதத்தில் சுற்ற ஆரம்பித்தோம் (பக்தி மார்க்கதில்தான்). ஆனால், ஆரம்பித்த இரண்டாவது நாள்தான் நண்பன் மாதவனின் நோக்கம் புரிந்தது. PKS என்று செல்லப் பெயர் வைத்த Perumal Koil Sisters என்ற இரண்டு மிக அழகான பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடத்தான் இந்த பக்தி என்று தெரிந்தது.
அதில் ஒரு பெண்ணின் பெயர் லக்ஷ்மி காந்தம்(என்ன பொருத்தமான பெயர்?). உங்களில் எவ்வளவு பேர் சௌராஷ்ட்ரா பெண்களைப் பார்த்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் பிறந்து, வளர்ந்த மதுரையில் ஏராளமான சௌராஷ்ட்ரா மக்கள் இருக்கிறார்கள். இந்த பெண்கள் முக்கால்வாசி ஒரு வித்யாசமான மஞ்சள் நிறத்தில் இருப்பார்கள் (சிவப்பு கிடையாது, வெள்ளை கிடையாது, மஞ்சள்!) பெரும்பாலும் பார்க்க நல்ல அழகாகவே இருப்பார்கள். ஆனால் பேசுவதற்கு ரொம்பவே பிகு பண்ணுவார்கள் (அப்போதைய நிலவரம்).
இந்த அழகி தரிசனம் கிடைக்க தினசரி பெருமாள் கோயில் விஜயம். வீட்டில் பெற்றோர்கள் ஆஹா, நம் மகனுக்கு என்ன பக்தி என்று புல்லரித்துப் போனார்கள். ஆனால், பெருமாளுக்கே நானும், நண்பனும் செய்த கேப்மாரித்தனம் பிடிக்கவில்லை என நினைக்கிறேன். ஒரு நாள் கோயிலை விட்டு வெளியே வரும்போது ஆஜானுபாகன் ஒருவன் (சினிமாவில் வருவது போல), எங்களுடைய கனவுக் கன்னியை ஸ்கூட்டரில் கவர்ந்து போய்விட்டான்.
அதற்குப் பிறகு ஒன்றும் சொல்கிற மாதிரி ஜொள்ள முடியவில்லை. இன்ப (?) அதிர்ச்சியாக ஒரு நாள் நண்பன் ரவியின் வீட்டில் அதே அழகியை (லக்ஷ்மி காந்தம்) பார்த்தேன். ரவியின் தங்கையின் (ஐயா, இப்போது என்னுடைய மனைவி) கல்லூரித் தோழி அவள் என்பதும், என் கண் முன்னே அவளைக் கவர்ந்து சென்றவன் மூர்த்தி எனும் ஒரு கராத்தே வீரன் என்று தெரிந்தவுடன் ஆகே, பீச்சே (ஹிந்தி தெரிந்தால் புரியும்)என்று மூடிக்கொண்டு ஜூட் விட்டேன்.
பிறகு PG சேர்ந்த பிறகு, நானும் என நண்பன் பாபு என்கிற பாலகிருஷ்ணனும் என வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருப்போம். விசுக், விசுக் என்று அந்த சமயம் பார்த்து ஒரு பெண் (பெயர் தெரியாது, அதன் புஸு, புஸு தலைமுடியை வைத்து நாங்கள் வைத்த பெயர், குருவிக்கூடு-பாபு, ஞாபகம் இருக்கா?) அந்த வழியே செல்லும். எங்களை ஓரக்கண்ணால் பார்த்தால் ஒரே குஷிதான். இதை எப்படியோ கவனித்து விட்ட என தந்தை (எப்போதுமே ஒரு ஜென்டில்மன்), என் காதுபட என் அம்மாவிடம், "வர, வர பெண்கள் எல்லாம் ரொம்ப மோசம், காலாகாலத்தில் வீடு மாற்றவேண்டும்" என்றார். அவரே, பின்னாளில் என்னுடைய காதலுக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் பச்சை கொடி காட்டி, மறுபடியும் தானொரு ஜென்டில்மன் என்பதை நிரூபித்தார்.
அதன் பின் ரொம்பச் சமர்த்தாக நான் உண்டு, என் படிப்பு உண்டு என மாறிவிட்டேன்.
ஹலோ, சரியா கேக்கலை, என்ன சொல்றீங்க? என்னது, கல்யாணத்துக்கு அப்புறம் ஜொள் விட்ட விஷயமா? ரொம்ப லொள்ளுதான், ஏன்யா, குடும்பத்தில கொழப்பம் பண்றீங்க!
Comments