Skip to main content

எழுத்தாளர் சுஜாதா என்கிற மாபெரும் ஜீனியஸ்!


சுஜாதா என்கிற மாபெரும் எழுத்தாளர், இலக்கியவாதி, விஞ்ஞான ஆர்வலர், திரைப்பட வசனகர்த்தா...என்று பன்முகங்கள் கொண்ட இந்த ஜீனியஸ் பற்றிய முகவுரை தேவை இல்லை என்றாலும், நான் தமிழ் புத்தகமே படிப்பதில்லை என்று அலட்டல் செய்யும் நண்பர்கள் சிலரும், நான் புத்தகமே படிப்பதில்லை என்று சொல்லும் நண்பர்கள் பலரும் இருப்பதால்....

_____________________________________________________________________________________
நன்றி: சுப்புடு, கிறுக்கல்.காம்

70களிலும் 80களிலும் ஒரு ராக் ஸ்டார் அந்தஸ்து பெற்றிருந்த எழுத்தாளர் சுஜாதாவைப் நம்மைபோல் இந்தத் தலைமுறை ஆட்களும் படித்து ரசிப்பதற்கு அவரின் எழுத்துத் திறமை மட்டுமே காரணம்.

"When I was little, my ambition was to grow up to be a book. Not a writer. People can be killed like ants. Writers are not hard to kill either. But not books. However systematically you try to destroy them, there is always a chance that a copy will survive and continue to enjoy shelf-life in some corner of an out-of-the-way library somewhere, in Reykjavik, Valladolid, or Vancouver."

-Amos Oz

S.ரங்கராஜன் பிறந்தது சென்னைத் திருவல்லிக்கேணியில் உள்ள தெப்பக் குளத்தின் தெற்குத் தெரு வீதியில். மே 3, 1935 அன்று. வைஷ்ணவர். அப்பா சீனிவாச ராகவன் மின்சாரவாரியம் வாரியமாவதற்கு முன்னால் இருந்து வேலை செய்து கொண்டிருந்தார். அம்மா கண்ணம்மா, ஒரு பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவர். "சரியாக எழுபது ஆண்டுகளுக்கு முன், வீட்டுக் காரியங்கள் எல்லாம் முடித்துவிட்டு, வலியெடுத்து, எந்தவித உதவியும் இல்லாமல், அப்பா மருத்துவச்சியை அழைத்து வருவதற்க்குள், என்னைப் பெற்றெடுத்த என் அம்மா கண்ணம்மா" என்கிறார் சுஜாதா.

ரங்கராஜனின் அண்ணன் திரு கிருஷ்ணமாச்சாரி ஒரு டாக்டர், தம்பி ராஜகோபாலன் தொலைபேசி இலாகாவில் இன்ஜினியர். தங்கை விஜி. "ராத்திரி என்னவோ ஆச்சு... ரெண்டு தடவை வாந்தியெடுத்தா. கார்தாலை பிராணன் போய்ட்டது' என்று பாட்டி அழுதாள். எனக்கு அப்போது பதினொரு வயசு. என் தங்கை விஜிக்கு மூன்று வயது. குழந்தை என்பதால் கையிலேயே தூக்கிப் படித்துறைக்கு கொண்டுசென்று கொள்ளிடக்கரையில் புதைத்தது ஞாபகம் இருக்கிறது. முதன்முறையாக ஆற்றாமை, சோகம் grief என் நடைமுறையை பாதித்தது."

பிறந்தது சென்னையில் என்றாலும் வளர்ந்தது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். தாத்தா குவளக்குடி சிங்கமையங்கார். அப்பாவின் உத்யோகம் காரணமாக அவர் அடிக்கடி இடம் மாறுவதால், முதல் பதினேழு வருடங்கள் கோதை அம்மாள் என்கிற ருக்குமணி அம்மாள் பாட்டியுடன் வளர்ந்தார். "பாட்டி என்னை எத்தனைத் தூரம் காப்பாற்றி இருக்கிறாள். ஒரு பெரிய சொத்துக்கு சுவிகாரம் கொடுப்பதை கடுமையாக எதிர்த்துத் தடுத்தியிருக்கிறாள். அந்த சுவிகாரம் நடந்திருந்தால் நான் மகேந்திரமங்கலத்திலோ குவளக்குடியிலோ ஒரு பண்ணையாராக வெள்ளிச் சொம்பும், பன்னீர் புகையிலையும் பத்தமடைப் பாயும், இஸ்பெட் ஆட்டமுமாக வளர்ந்திருப்பேன். எழுத்தாளனாகியிருப்பேனா...சந்தேகம்."

ஸ்ரீரங்கத்தில் The High School என்னும் ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் படிப்பு. ரங்கராஜன் படிப்பில் சுட்டியாக இருந்தும் பிரபலமாக எல்லாம் இல்லை. பள்ளிப் படிப்பிற்கு பின் திருச்சிக்கு ஜாகை மாறி, இண்டர்மீடியட் என்று இரண்டு வருடமும், பின் பிஎஸ்சி Physics இரண்டு வருடமும் படித்தது புனித சூசையப்பர் காலேஜில். இந்த ஜோசப் காலேஜில் தான் ரங்கராஜனுக்கு ஒரு வாழ்க்கைத் திருப்பம் காத்திருந்தது.

என்ன தான், ஸ்ரீரங்கத்தில் மற்றோரு ரங்கராஜனுடன்(இப்போது கவிஞர் வாலி) சேர்ந்து கையெழுத்துப் பிரதி நடத்திக் கொண்டிருந்தாலும், எழுத்தார்வம் அதிகமானது கல்லூரியில் தான். அப்போது கூட படிக்கத்தான் ஆசை. காரணம் ஜோசப் சின்னப்பா என்ற ஆங்கில விரிவுரையாளரும், ஐயம் பெருமாள் கோனார் என்னும் தமிழாசிரியரும் தான். ஜோசப் சின்னப்பா நடத்திய நான்-டீடெய்ல்டு பாடத்தினால் சிறுகதைகளார்வமும், ஐயம் பெருமாளினால் தமிழார்வமும் ரங்கராஜனுக்கு அதிகமாயின.

1953ல் முதன்முறையாக ஒரு சிறுகதை எழுதி அனுப்பினார். அது 'சிவாஜி' என்ற புத்தகத்தில் வெளிவந்தது. "கதை வெளிவந்த போது திருச்சி நகரமே அலம்பி விட்டாற்போல இருந்தது. அந்த வட்டாரத்தில் 'சிவாஜி' இதழின் காப்பிகள் கடகடவென்று விற்றுத் தீர்ந்து விட்டன, எல்லாவற்றையும் நானே வாங்கி விட்டதால்".

அதே ஜோசப் கல்லூரியில் அவருடன் படித்த சக மாணவர், தற்போது இந்தியாவின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். கல்லூரிக்குப் பின்னர், சென்னை குரோம்பேட்டையிலுள்ள MITல்(Madras Institue of Technology), சேர்ந்து எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தார். அப்போதும் அவரின் பாட்ச்சில் படித்தவர் அப்துல் கலாம். கலாம் அப்போது ஏரொனாட்டிக்ஸ் படித்துக் கொண்டிருந்தார். அப்போதே ரங்கராஜன் Infinite Mathematics பற்றியும் கலாம் ஆகாய விமானங்கள் கட்டுவது பற்றியும் தமிழில் விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதி, இருவரும் பரிசு வாங்கினர்.

இன்ஜினியரிங் படிப்பிற்கு பிறகு, ஸ்ரீரங்கத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவரை அவர் தந்தை, வேலைக்கு விண்ணப்பிக்குமாறு அனுப்பினார். இந்திய அளவில் இன்ஜியர்களுக்கான தேர்வு எழுதி ஆல் இந்தியா லெவலில் இரண்டாம் ரேங்க் வாங்கினார். இது நடந்தது 50களில். அப்போது ஐ.ஏ.எஸ் போன்றோரு எக்ஸாம் இது.

இந்திய அரசாங்கம் ரங்கராஜனை அள்ளிக் கொண்டு போய் டெல்லியில் விட்டது. முதலில் ஆல் இந்தியா ரேடியோவில் ட்ரைனியாகச் சேர்ந்தார். பிறகு முதல் வேலையாக சிவில் ஏவியேஷன்ஸ் பிரிவில், Air Traffic Controllerஆக சென்னை மீனம்பாக்கத்தில் சேர்ந்தார். இரண்டொரு வருடங்களுக்குப் பிறகு 'கிளாஸ் ஒன் - டெக்னிகல் ஆபிசராக' வேலை மாறி டெல்லி சென்றார்.

பெரிய பெரிய இடங்களில் இருந்து ரங்கராஜனுக்கு வரன்கள் வர, அவரின் அப்பாவோ தன்னுடய ஆபிஸ் நண்பரின் பெண்ணை மணமுடிக்க ஏற்பாடு செய்தார். சுஜாதா எத்திராஜில் பிஎஸ்சி படித்த வேலூர்ப் பெண். ரங்கராஜனுக்கும் - சுஜாதா(!!)விற்கும் கல்யாணம் நடைப்பெற்றது. "அப்போ எனக்கு இருபது வயசு. இவருக்கு இருபத்தேழு. காலேஜ் முடிச்சுட்டு நான் நேரே வந்ததால், எனக்கு உருப்படியா நல்ல ரசம் கூட வைக்கத் தெரியாது. டெல்லியில் குடியிருந்த நம்ம தமிழ் மாமி ஒருத்தர்கிட்டேதான் போய் ஒவ்வொண்ணா சமைக்க கத்துக்கிட்டு வந்தேன். வெடிக்கிற அபாயம் இல்லாத ருக்மணி பிரஷர் குக்கர்லதான் சமையல்!". பிற்காலத்தில் தன் மனைவியின் பெயரான சுஜாதா என்பது பிரபலமாகப் போகிறது என்பது அப்போது ரங்கராஜனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

இந்த சமயத்தில் தான் வேலை நிமித்தமாக அடிக்கடி டூரில் சென்றார். அப்போது பொழுது போக நிறைய படிக்கவும் எழுதும் ஆர்வம் அதிகமானது. தனது நண்பனான் ஸ்ரீனிவாசனின் சுஷ்மா எங்கே ? என்ற ஒரு க்ரைம் கதையை கொஞ்சம் திருத்திக் கொடுக்க, அது குமுதத்தில் வெளியிடப்பட்டது. அதை தனது எழுத்துக்கான அங்கிகாரமாக வைத்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார்.

குமுதத்தில் ஏற்கெனவே ஒரு (ரா.கி) ரங்கராஜன் இருந்ததால் ''நீங்க வேற ஏதாவது பேர் வச்சுக்கங்களேன்!...'' என்று சிலர் சொல்ல, ரங்கராஜன், சுஜாதா என்கிற தன் மனைவி பேரில் எழுத ஆரம்பித்தார். தமிழ் இலக்கிய உலகம் தலையை சிலுப்பி கொண்டு எழுந்தது. ரங்கராஜன் காணாமல் போய் சுஜாதா என்கிற மூன்றெழுத்து பிரபலமாக ஆரம்பித்தது.

ரங்கராஜன் தம்பதிகளுக்கு ஒரு வருடத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்தது. அதற்குப் பிறகு ரங்க பிரசாத், கேஷவ பிரசாத் என்று இரண்டு மகன்கள். கேஷவ் பிரசாத்திற்கு திருமணமாது 'கே' என்கிற ஜப்பானிய பெண்ணுடன். அவர்களுக்கு சித்தார்த் என்று ஒரு மகன், இவருடைய பேரன்.

டெல்லியில் பதினான்கு வருடங்கள் கழித்து, 1970ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ்[BEL] நிறுவனத்தில் டெபுடி மானேஜராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின் முப்பது வருடங்கள் பெங்களூர் வாசம் தான். பிறகு சிறிது வருடங்களில் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டு பிரிவில் ஜிஎம் பதவிக்கு உயர்ந்த போது, கடுமையான வேலைகள் காத்துக் கொண்டிருந்தன. Electronic Voting Machine(EVM) என்று இன்றுள்ள வாக்கெடுப்பு இயந்திரத்தை தயாரித்த BELலின் R &D பிரிவின் சீப் ஆக பணியாற்றினார். இந்த வாக்கெடுப்பு மிஷின் தான் இந்தியாவெங்கும் பயன்படுத்தப் படுகிறது.

இங்குதான் மீண்டும் தன் நண்பர் கலாமுடன் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. இருவரும் ஏவுகணை ப்ரோக்கிராமிங் செய்தார்கள். கலாமைப் பற்றி தனது நினைவுகளை பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் சுஜாதா. அவர்களிருவரும் சேர்ந்து ராக்கெட் இயலை பற்றி திப்பு சுல்தான்லிருந்து தொடங்கி எழுத நினைத்திருந்தனர். இன்னும் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இதே நேரத்தில், எழுத்துலகில் ராக் ஸ்டார் அளவிற்கு புகழ் பெற்றார். ஒரே நேரத்தில் ஐந்து புத்தகங்களில் ஆறு தொடர்கதைகளெல்லாம் எழுதினார். "இவர் எழுதினா இவரோட லாண்டிரி பில்லைக் கூட பப்ளிஷ் செய்வாங்க" என்றெல்லாம் பேசினார்கள். கதை, கட்டுரை, நாடகம், ஊடகம் என்று தனது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டு எழுதினார். இவரின் கதைகள் நன்றாக இருந்தாலும் அவைகளை சினிமா படமெடுத்தவர்கள் மாற்றியதால் தோல்வியைத் தழுவின. பாலசந்தருக்கு நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு முதன் முதலில் வசனமெழுதினார்.

1993ல் பிஇஎல்லிலிருந்து ரிடையரான போது முடிவெடுக்கப் பட வேண்டிய விஷயம் ஒன்றிருந்தது. ரிடையர்மெண்டுக்கு பிறகு எங்கு செல்வது? சென்னை செல்ல வேண்டாம், குடிநீர்ப் பிரச்சனை என்று சொன்ன நண்பர்களை தட்டிக் கொடுத்து சென்னையில் ஆழ்வார்ப்பேட்டையில் குடியேறினார்.

இதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தான் மணிரத்னத்தின் ரோஜா படத்திற்கு வசனமெழுதினார். அந்தப் படம் தமிழ் சினிமாவை நிறையவே மாற்றிப் போட்டது. சென்னைக்கு வந்த பின், கமல் சொல்லி ஷங்கரின் படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்தார். சிவாஜி புத்தகத்தில் வந்த சிறுகதை தொடங்கி இன்று ரஜினியின் சிவாஜிப் படத்திற்கு வசனம் வரை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலம் எழுத்துலகில் இருந்து வந்திருக்கிறார். இன்று வரை 100 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 15 நாடகங்களும், ஏராளமான விஞ்ஞான மற்றும் இதர கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். நண்பர்களுக்காக அவ்வப்போது சினிமாப் பட வசனம் எழுதுகிறார்.

"Writing was never my career, it was my hobby" என்பார். தொடக்கத்திலிருந்து அந்த creative impulseஐ வெளிப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்திருக்கிறார். படம் வரைந்திருக்கிறார்."நான் எழுத வரலைனா படம் வரைஞ்சுண்டு இருப்பேன்". ஹார்மோனிகா முதற்கொண்டு புல்லாங்குழல், புல்புல்தாரா வரை எல்லாம் வாசித்துப் பழகியிருக்கிறார்.

"ஒரே ஒரு முறை, "மாடில பூனை குட்டி போட்டிருக்கா பாரு" என்று கேட்டாள் பாட்டி.

"பூனை இல்லை பாட்டி...புல்புல்தாரா, நான் வாசிக்கறது".

"நீ மாடிக்கு படிக்கப்போறேன்னு நினைச்சேன்".

"அது வந்து..படிப்பேன்..அப்பப்ப வாசிப்பேன்".

"ஒண்ணு படி...இல்லை மோர்சிங் வாசி".

"மோர்சிங் இல்லை...புல்புல்தாரா"

"பேரைப் பாரு!! உங்கப்பாவுக்கு லெட்டர் போட்டுர்றேன்...எனக்கு கவலையா இருக்கு. இன்னிக்கு புல்புல் வாசிப்ப...நாளைக்கு புகையில போடுவ.. கூத்தாடியாத்தான் வரப்போறேன்னா ஒரு காரியத்தை உருப்படியாப் பண்ணு...உங்கப்பன் காசைக் கரியாக்காதே"

டெல்லிக்குப் போய் ஒரு கிட்டார் வாங்கி தானகவே பழகிக்கொண்டார். மனைவி - "அப்போ மேற்கத்திய இசை உலகில் 'பீட்டில்ஸ்' வந்த பீரியட். இளைஞர்கள், கிதார் கிதார்னு பைத்தியமா இருந்த நேரம்! இவர் ரொம்ப அருமையா கிதார் வாசிப்பார்!... கிதார் மட்டுமல்ல... எல்லா இசைக்கருவிகளையுமே நல்லா வாசிப்பார். இவர் யார்கிட்டேயும் இதுக்காக கத்துகிட்ட மாதிரி தெரியலே... அவரேதான் முயற்சி பண்ணி வாசிச்சார் போல!..."

இதைப் போல் எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பலவகையான false startsக்குப் பின் தன் ஆரம்பக் காதலான எழுத்துக்கு திரும்பி வந்துவிட்டார்.

சுஜாதாவிற்கு என்பதுகளின் நடுவிலும் பிறகு 2002லும் உடல் நிலை பாதித்தது. இரண்டு முறை ஆன்ஜியோவும் ஒரு பைபாஸும் செய்திருக்கிறார்கள். தன் உடல் நிலை காரணமாக அதிகமாக நடமாட முடியாமல் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் எழுத்தார்வமோ குறைவதாகக் காணோம்.

தற்போது மயிலாப்பூரில் ஒரு ப்ளாட்டில் தனது மனைவி சுஜாதா மற்றும் கிவி என்றொரு செல்ல நாயுடன் வசித்து வருகிறார். இரு மகன்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

"ஆபீஸக்கு காலையில் போய்ட்டு வருவார். மதியம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அஞ்சரைக்கு மேல மெரினாவில் வாக் போயிட்டு வருவார். வந்தப்புறம் எழுதறது, படிக்கிறதுன்னு சமயத்தில் நைட் ஒரு மணி வரைகூட வேலை பார்ப்பார். "

வாராவாரம் சனிக்கிழமையன்று அம்பலம்.காமில் வணக்கம் நண்பர்களே என்று சாட்டுக்கு வந்து விடுவார். தனது வாசகர்களுடன் வாராவாரம் சாட் செய்யும் தமிழ் எழுத்தாளர் இவர் ஒருவர் தான். நீங்கள் கூட writersujatha@hotmail.com என்று மெயிலனுப்பலாம். ரத்தின சுருக்கமாய் எழுதினால் பதில் கண்டிப்பாய் வரும்.

என் பழைய நண்பி ஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில்," Nobody dies; they live in memories and in the genes of their children". How True ?
_____________________________________________________________________________________
இனி என் அனுபவம்:

புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆதர்ச எழுத்தாளர் ஒருவர் (அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்) இருப்பார். அந்த வகையில் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சுஜாதாதான். மிகவும் சின்ன வயதில் அம்புலிமாமா, முத்து காமிக்ஸ் (லாரன்ஸ், டேவிட், இரும்புக்கை மாயாவி) படித்ததெல்லாம் இதனுடன் சேராது.

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது (ஒன்பதாம் வகுப்பு என்று ஞாபகம்), நண்பன் ராமகிருஷ்ணன் என்பவன் கையில் ஒரு ராணிமுத்து மாத நாவலை வைத்துக்கொண்டு ("அனிதா: இளம் மனைவி") "இந்த நாவல் படிச்சியா, சுஜாதான்னு ஒரு லேடி சூப்பரா எழுதி இருக்கு," என்று சொன்னான். புத்தகத்தை வாங்கி பிரித்தால் பிடி மீசையுடன் ஒரு ஆணின் படம் போட்டு, இவர்தான் சுஜாதா என்ற பெயரில் எழுதும் ரங்கராஜன் என்று போட்டிருந்தது. என் நண்பனைப் பார்த்து, "ஏண்டா பன்னாடை, இது ஒரு ஆம்பிளை எழுதின நாவல்டா," என்று சொன்னதற்கு வழிந்து விட்டு போய்விட்டான்.

பிறகுதான் தெரிந்தது, பெண் பெயரில் இளம் மனைவி என்றெல்லாம் வந்தவுடன், எதோ பலான புத்தகம் என்று நினைத்து வாங்கியிருக்கிறான் அந்த சோம்பேறி என்று. எது எப்படியோ, நான் சுஜாதாவின் தீவிர ரசிகனாக ஆவதற்கு அவன்தான் மூல காரணம்.

அனிதா: இளம் மனைவியில் ஆரம்பித்த நான் சுஜாதா நாவல் எதையுமே அதன் பின் விட்டு வைக்கவில்லை. அந்நாளில் என் நல்ல நண்பனான ரவியும் (இப்போது இவன் என் bro-in-law, ஸோ, நல்ல நண்பன் என்று சொல்ல முடியாது) நானும் சேர்ந்து அத்தனை சுஜாதா புத்தகங்களையும் வாங்கித் தள்ளினோம். மாலைமதியில் அவருடைய "விபரீதக் கோட்பாடு" வந்தபோது கடையில் வாங்கிக்கொண்டு வரும்போது, வழியில் ஒரு மண்டபம் தென்பட அதில் உட்கார்ந்து கொண்டு படிக்க ஆரம்பித்தோம். அருகில் இருந்த பல்வேறு பிசைக்காரர்களைக் கூட கவனிக்கவில்லை. என் தந்தையின் நண்பர் ஒருவர் இதைப் பார்த்துவிட்டு, என் தந்தையிடம், "என்ன வோய், பிள்ளயாண்டானோட எதாவது சண்டையா, கோச்சிண்டு போய் பிச்சைக்காராளோட ஒக்காந்திருக்கானே, " என்று உளறிவிட என் தந்தை பதறிய கதை தனி.

பிறகு, கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்த பின்னரும் அவர் எழுத்தின் மேல் உள்ள காதல் குறையவில்லை (இன்று வரை இது உண்மை).

கடலூரில் வேலை பார்த்து வந்தபோது சென்னையில் வருடாவருடம் புத்தக விழா ஆரம்பிக்க, இதற்காகவே, ஒவ்வொரு ஜனவரியும் மெனக்கெட்டு சென்னை வந்து புத்தகங்கள் வாங்குது வழக்கம் (இன்று வரை இது தொடர்கிறது, என்ன இப்போது என் குழந்தைகள், மற்றும் மனைவியுடன் செல்கிறேன்).

சுஜாதா வசனம் எழுதிய முதல் படமான நினைத்தாலே இனிக்கும் முதல், பிறகு வந்த இது எப்படி இருக்கு, காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, பொய் முகங்கள், விக்ரம், நிலா காலம், இந்தியன், முதல்வன், கண்ணெதிரே தோன்றினாள், விசில், கன்னத்தில் முத்தமிட்டால், ரோஜா, நாடோடித் தென்றல், அந்நியன், கண்களால் கைது செய்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிவாஜி (எதாவது படம் விட்டுப் போய்விட்டதா?) வரை எதையுமே விட்டுவைக்கவில்லை நான்.

சமீபத்தில் அவருக்கு உடல் நலம் கெட்டு (நிமோனியா என்று கேள்வி) அபோலோவிலிருந்து இப்போது வீட்டுக்கு வந்து விட்டார் என்று கேள்வி. சீக்கிரம் வந்து எழுத ஆரம்பிங்க சார், ரொம்ப போர் அடிக்குது.

எல்லாவித subjects ஐயும் தொடும் இவர் எழுத்துக்கு என்றுமே வயதாவதில்லை.

ஆரம்பம் முதல் இது நாள் வரை சுஜாதா கோடிட்டு காட்டிய நிறைய புத்தகங்களை வாங்கியிருக்கிறேன் (கௌதம புத்தரின் தம்ம பதம், Zen and the Art of Motorcycle Maintenance இதுவரை படிக்கவில்லை), நிறைய படங்களைப் பார்த்திருக்கிறேன், இரண்டொருமுறை தொலை பேசியிருக்கிறேன், சில மின்னஞ்சல்கள் அனுப்பி பதிலும் பெற்றிருக்கிறேன்.

ஒரு பேட்டியில், "எனக்கென்னமோ, உண்மையான ரசிகர்கள் கடிதம் எழுத மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது," என்று சொன்னது, என்னைப் பொறுத்தவரை உண்மைதான். இதுவரை அவர் கதைகளை விமர்சித்து ஒரு கடிதம் கூட எழுதியதில்லை.

Comments

Anonymous said…
Sridhar,

I was going through your blog today for more than an hour (i find time today)

Your comments about Writer Sujatha is absolutely similar to my thoughts about Sujatha. In those days, I used to wait for weekly release of Kumudam & Vikadan for his thodar kathai. Still I have compiled a stories," pirivom sandhipom, Ethaium orumurai..like.

Your writing clearly shows that you have picked up his style of writing.

On the day of his death, I saw in The Hindu Obituary column (with their home telephone no. published) and I contacted that telephone no. and spoke to some of his relatives who were there by that time and I condoled his death.(I was at Trichy on that day and the whole day I lost my total balance)

Even today also when i read your blog, I shed tears for his passing away.

I dont think I left any of his stories unread.

(You missed to mention the film Nayagan in his contribution)

Really we have lost him and it is an irrepairable loss.

Sekar.R.C.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...