தீபாவளி என்றால் கிட்டத்தட்ட எல்லோருக்குமே பட்டாசும், புதுத்துணியும் தான் நினைவு வரும். எனக்கு என் அப்பா. மூன்று பெண்களுக்கு நடுவே ஒரே பையனாக பிறந்ததாலோ என்னவோ, என் அப்பாவுக்கு என் மீது ஒரு தனி வாஞ்சை. என்ன ஆனாலும் சரி, எனக்கு காஸ்ட்லியான துணிதான் வாங்குவார்.
மதுரையில் அமர்ஜோதி என்ற ஆயத்த ஆடையகம் (ரெடிமேட் துணிக்கடை) அப்போது ரொம்ப பிரபலம் (இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை). நான் ஸ்கூலில் ஐந்தாவதோ, ஆறாவதோ படிக்கும் போது ஒரு நல்ல ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலந்த டிசைனில், மிகவும் மெத் மெத் என்று ஒரு சட்டை வாங்கிக்கொடுத்தார். அந்த சட்டை ஈஜிப்ஷன் காட்டனில் செய்யப்பட்ட சட்டை என்பதால் எனக்கு ஒரே பெருமை. அந்த வருஷம், என்னுடைய கிளாசில் யாரும் ரெடிமேட் சட்டையே வாங்கவில்லை என்பது வேறு விஷயம்.
பட்டாசுக்கு ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு ஒரு மாசம் முன்பே லிஸ்ட் போட ஆரம்பித்துவிடுவேன். நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகத்தான் என் அப்பா எனக்கு வாங்கித் தருவார். சுற்றும் முற்றும் இருக்கும் சக நண்பர்கள் வயிறு எரியும்படி, தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே மத்தாப்பு கொளுத்த ஆரம்பித்து விடுவேன்.
இப்போதெல்லாம் என் குழந்தைகளை தீபாவளிக்கு நிறைய பட்டாசு வாங்கி வெடிங்கடா என்றால், அட போப்பா என்று சொல்லிவிட்டு, என் பெண் TV முன்னால் உட்கார்ந்து "மானாட மயிலாட" பார்க்க ஆரம்பித்து விட, என் பையனோ PCயில் Ocean's 13 ரசிக்க ஆரம்பித்துவிட்டான். ஹ்ம்ம்...இதுதான் அந்த பொல்லாத generation gapஆ?
Comments