Skip to main content

எழுத்தாளர் சுஜாதா எனும் ஜீனியஸ்: ஒரு ரசிகனின் அஞ்சலி




நேற்று இரவு சுமார் 10 மணிக்கு சுஜாதா காலமான செய்தி, எனக்கு சற்று தாமதமாக இன்று காலைதான் தெரிந்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக அவருடைய எழுத்துக்களை விடாமல் துரத்தும் ஒரு ரசிகன் என்கிற முறையில் என்னால் மனப்பூர்வமான அஞ்சலியை மட்டுமே செலுத்த முடியும்.

ஒரு எழுத்தாளனின் நடை, எழுத்தாக்கம், உணர்வு இவற்றையெல்லாம் மீறி எனக்கு (என்னைபோன்ற எத்தனையோ பேருக்கு) சுஜாதா பல விஷயங்களில் ஒரு மானசீக குரு என்றுதான் சொல்லவேண்டும்.

அவர் நன்றாக இருக்கிறது என்று கைகாட்டிய நிறைய கவிதைகளை, கதைகளை வாசித்திருக்கிறேன்: அவரால் சிலாகிக்கப்பட்ட திரைப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன்;அவர் சொன்ன கட்டுரைகளை இணையதளத்தில் தேடிப்பிடித்து download செய்து படித்திருக்கிறேன்; அவர் வசனம் எழுதிய ஒரே காரணத்தால் விசில், கண்ணெதிரே தோன்றினாள் போன்ற குப்பையான படங்களையும் பார்த்திருக்கிறேன்.

இன்றைய நிலையில் தமிழ்நாட்டிலே பிறந்த நிறைய குழந்தைகளுக்கு (என் வாரிசுகள் உட்பட) தமிழ் படிக்கவே தெரியாத காலத்தில், சுஜாதாவின் எழுத்து மூலம் நிறையவே கற்றுக்கொண்டேன் என்றால் அது மிகையாகாது. அவர் தந்தை இறக்கும்போது அவருக்கு வயது 93 என்று படித்திருக்கிறேன். அவருடைய தந்தையின் மறைவைப் பற்றி குமுதத்தில் எழுதும்போது, " மறுபடியும் அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை என்ற செய்தி வர, அவசர அவசரமாக KPN பஸ் பிடித்து (அப்போது சுஜாதா பெங்களூரில் இருந்தார்) சேலம் சென்றேன். கவலையுடன் இருந்த என்னைப் பார்த்த கண்டக்டர் என்ன சார அடிக்கடி வரீங்க?
என்றார்.அப்பாவுக்கு உடம்பு சரியில்லைப்பா என்றேன். ஓகோ, அப்படியா, டே அந்த மொளகா மூட்டைய பாத்து எறக்குடா," அந்த சமயத்திலும் அவருடைய நகைச்சுவை உணர்வு தலைதூக்கியதை ரசித்திருக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன், அவர் BEL நிறுவனத்தில் பணி புரியும் போது LTC எடுத்துக்கொண்டு மனைவி, குழந்தைகளுடன் காரில் ஊர் சுற்றியதைப் பற்றி (தமிழ்நாடு 2000 மைல்) எழுதும் போது, "வீட்டை விட்டு வெளியே வந்து கொரமங்கலாவை நெருங்கும்போது ஸ்ஸ்ஸ்ஸ்.... என்ற சத்தம் கேட்கவே, ஐய்யோ கார் டயர் பஞ்சராகிவிட்டதா என்று பதட்டத்துடன் கீழே இறங்கிப் பார்த்தால். ஒன்றுமில்லை. என் இரண்டாவது மகன் நான்தான் அப்படி சத்தம் செய்தேன் என்றான். ஏற்கனவே லேட் என்பதால் அவனை சவட்டும் எண்ணத்தை ஒத்திப் போட்டுவிட்டு காரை ஸ்டார்ட் செய்தேன்" என்று எழுதி இருப்பார்.

நான், என் நண்பன் நாகு (என்னைபோலவே இன்னொரு தீவிர சுஜாதா ரசிகன்) எல்லோருக்கும் அப்போது இருந்த ஒரு பேராசை: சுஜாதா கதை வசனம் எழுத, கமல் நடிக்க, இளையராஜா இசை அமைக்க ஒரு படம் வரவேண்டும் என்பதுதான். அது விக்ரம் படம் மூலம் நிறைவேறினாலும், துரதிருஷ்டவசமாக அந்த படம் ஓடாமல் போனாலும் அதை எவ்வளவோ முறைப் பார்த்து ரசித்தோம்.

அவர் எழுத்துக்கு என்றும் வயதாவதில்லை. நான் சாகும் வரை அவற்றை படித்து ரசிக்கத்தான் போகிறேன்.

அவருடைய ஆன்மா எல்லாம் வல்ல (அவருடைய இஷ்ட தெய்வமான) ஸ்ரீரங்கநாதனின் பாதங்களை அடைத்திருக்கும் என நினைக்கிறேன்.

Comments

Unknown said…
ராம்...நானும் உங்களைப்போல் ஒருவன். சுஜாதாவை படித்து படித்து....நம் நினைவு தவறும் வரை சுஜாதாவை மறக்க முடியாது. போயிட்டாரே மனுஷன். "ஒருத்தரும் அவுட்டே ஆக மாட்டாங்க என்று கிரிக்கெட்டில் ரூல் இருந்தால், அந்த ஆட்டம் ரசிக்குமா?" என்று மரணத்தை அழகாக எளிமையாக நியாயப்படுத்தியவர். ஆனால் அவர் மறைந்ததை நம்மால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே...5 வருஷங்கள் ஆயிடுச்சு...

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

செம்மொழியான தமிழ் மொழி படும்பாடு!

உங்கள் அம்மாவை நேசிக்க உங்களுக்கு பிறர் சொல்லித்தரத் தேவையில்லை. அதே மாதிரிதான் உங்கள் தாய் மொழியும். ஆனால், தமிழ் மொழி இப்போது தேவையில்லாமல், தேவையில்லாத இடங்களில் திணிக்கப்படுகிறது. பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்துக் கொள்ள எந்த வியாபாரியும் தயங்குவதில்லை, தயங்கவும் கூடாது. ஆனால், Students Xerox என்பதை மாணவர் நகலகம் என்றும், Green Land Furniture என்பதை பச்சை நில அணிகலன்கள் என்றும், Red Fort Restaurant என்பதை செங்கோட்டை உணவகம் என்றும் தமிழ்ப் படுத்தவேண்டும் என்று படுத்துவது எப்படி நியாயம்? சமீபத்தில் சிங்கப்பூரில் என் நண்பனின் தந்தையைப் பார்த்தபோது அவர் கேட்ட ஒரு கேள்வி (சந்தேகம்) ரொம்பவும் சரியாகப் பட்டது: இவ்வளவு தூரம் எல்லாவற்றையும் தமிழ் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் தமிழ்நாடு அரசு, Sun TV, K TV, Sun News, Sun Music, Red Giant Movies, Cloud 9 போன்ற பெயர்களை தமிழ்ப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? முயற்சிக்கவில்லையா, இல்லை முடியாது என்று விட்டுவிட்டார்களா அல்லது இவை எல்லாம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவை என்று விட்டுவிட்டார்களா? இதற்கு என்னைப் போன்ற சாதாரண குடிமகனிடம் எ...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...